தேடுதல்

CasAmica நோயாளர் இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் CasAmica நோயாளர் இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தையின் வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்

வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களின் தொடர்ச்சியாக, உரோம் நகரின் CasAmica, Il Ponte e l’Albero மறுவாழ்வு இல்லங்களை திருத்தந்தை பார்வையிட்டார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இரக்கத்தின் யூபிலி ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆரம்பித்த, வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களின் தொடர்ச்சியாக, டிசம்பர் 07, இவ்வெள்ளி மாலையில், உரோம் நகரின் தெற்கே, புறநகர் பகுதியிலுள்ள, இரு நலவாழ்வு மையங்களைப் பார்வையிட்டார் என, திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்தது.

இவ்வெள்ளி மாலை 3.30 மணியளவில் வத்திக்கானிலிருந்து புறப்பட்ட திருத்தந்தை, தொடர்ந்து சிகிச்சை தேவைப்படும் நோயாளர்கள் தங்கியுள்ள CasAmica இல்லத்தைப் பார்வையிட்டு, அங்கிருப்பவர்கள் பேசுவதைக் கேட்டு, கிறிஸ்மஸ் இனிப்பையும் அவர்களுக்கு வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

CasAmica இல்லத்தில் சிகிச்சை பெறுபவர்களில் அதிகமானோர், தென்இத்தாலியைச் சேர்ந்தவர்கள். மேலும், வட அமெரிக்கா மற்றும், கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இந்நோயாளர்களும், அவர்களின் குடும்பங்களும் பொருளாதார நெருக்கடியில் வாழ்பவர்கள் மற்றும் ஒவ்வொரு நாள் தேவைகளும் நிறைவேற்றப்பட உதவிகளை எதிர்பார்த்து இருப்பவர்கள்.

இன்னும், CasAmica இல்லத்திலிருந்து, பாலம் மற்றும் மரம் எனப்பொருள்படும், Il Ponte e l’Albero மறுவாழ்வு மையத்திற்குச் சென்று, அங்கு சிகிச்சை பெறுகின்றவர்களுடன் உரையாடி, கிறிஸ்மஸ் இனிப்பையும் திருத்தந்தை அளித்தார்.

இந்த மையத்தில், மூளை வளர்ச்சி குன்றிய 12 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களும் பல்வேறு குடும்பச் சூழல்களிலிருந்து வந்தவர்கள். இந்த மையத்தில் பராமரிக்கப்படும் சிறாரை வியப்பில் ஆழ்த்திய திருத்தந்தை, அவர்கள் மத்தியில் அமர்ந்து, அவர்களின் கேள்விகளுக்கும் பதில் சொன்னார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2018, 15:36