தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை 121218 திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை 121218  (ANSA)

புதன் மறைக்கல்வியுரை – செபம் வாழ்வோடு தொடங்குகிறது

“எங்கள் வானகத்தந்தையே” இறைவேண்டலில், அடிமைநிலை மற்றும் அச்சத்தின் தடைகளைத் தகர்த்தெறிந்து, நாம் இறைவனிடம் வேண்டுவதற்கு, இயேசு நம்மை ஊக்கப்படுத்துகிறார்

மேரி தெரேசா - வத்திக்கான்

இயேசு தம் சீடர்களிடம் கூறியது : கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால், அவர் தேளைக் கொடுப்பாரா?

தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!” (லூக்.11,9-13)

இப்புதன் காலையில், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் அமர்ந்திருந்த ஆறாயிரத்துக்கு அதிகமான திருப்பயணிகளுக்கு, இயேசு, தம் சீடர்களுக்கு, இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்த, லூக்கா நற்செய்தியின் இந்த இறைவேண்டல் பகுதி முதலில் வாசிக்கப்பட்டது. பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் காலை வணக்கம், கடந்த வாரம் நாம் ஆரம்பித்த, “எங்கள் வானகத்தந்தையே” இறைவேண்டல் பற்றிய மறைக்கல்வியை இன்றும் தொடர்வோம் என்று, தனது மறைக்கல்வியைத் தொடங்கினார்.  

தம் சீடர்கள் இறைவனிடம் மன்றாடுகையில், அவர்களுக்கு எவ்வகையான மனநிலை தேவை என, கிறிஸ்து விரும்புகிறார் என்பது பற்றி, “எங்கள் வானகத்தந்தையே” இறைவேண்டலில் இன்று சிந்திப்போம். இறைவனை, தந்தையே என, அவரிடம் மன்றாடுமாறு, இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். இவ்வாறு, நாம், அடிமைநிலை மற்றும் அச்சத்தின் தடைகளைத் தகர்த்தெறிந்து, இறைவனிடம் வேண்டுவதற்கு இயேசு, நம்மை ஊக்கப்படுத்துகிறார். இந்த இறைவேண்டலிலுள்ள ஏழு விண்ணப்பங்களும், நம் வாழ்வின் அன்றாட அனுபவம் மற்றும் அதன் அடிப்படைத் தேவைகளில் வேரூன்றப்பட்டவை. எடுத்துக்காட்டாக, எளிய, ஆனால், நாம் வாழ்வதற்கு மிகவும் அவசியமான, நம் அன்றாட உணவைக் கேட்கும்படி கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளோம். நமது முதல் வேண்டல், ஒருவிதத்தில், புதிதாகப் பிறந்த குழந்தை மூச்சை வெளியே விடுவதற்கு அழுவதுபோன்ற அழுகையாக உள்ளது. ஏனெனில் இது, நம் வாழ்வின் நிலையை அறிவிக்கின்றது. அதாவது, மகிழ்வான வாழ்வுக்கு, நாம் தொடர்ந்து பசிதாகம் கொள்வதையும், அதற்குரிய தேடலையும் அறிவிக்கின்றது. எனவே, அனைத்துத் துன்பங்களும், ஏக்கங்களும், இறைவனை நோக்கி எழும்பி, அவை இறைவனோடு மேற்கொள்ளும் உரையாடலாக மாற வேண்டுமென, இயேசு விரும்புகிறார். உண்மையில், கடவுளில் நம்பிக்கை வைத்திருப்பது என்பது, இந்த வழியில் அவரிடம் அழுகையோடு செபிப்பதாகும். இறைவன் உண்மையிலேயே ஒரு தந்தை. இவர், தம் பிள்ளைகளாகிய நம்மீது அளப்பரிய கருணை கொண்டுள்ளவர். மேலும், அவர், தம் பிள்ளைகள், எவ்வித அச்சமுமின்றி தம்மை நோக்கி மன்றாடுமாறு விரும்புகின்றவர். இக்காரணத்தால், நாம் அவரிடம் எதைப் பற்றியும் பேச முடியும். நம் வாழ்வின் குற்றங்குறைகள் அல்லது குழப்பங்களையும்கூட அவரிடம் கூற முடியும். மேலும், உலகம் முடியும்வரை, நம்மோடு இருப்பதாகவும் அவர் நமக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார்.

இவ்வாறு, “எங்கள் வானகத்தந்தையே” பற்றிய, இப்புதன் மறைக்கல்வியை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். டிசம்பர் 12, இப்புதன் குவாதலூப்பே அன்னை மரியா விழா. தம் மகன் இயேசுவின் ஒளி, இந்த உலகின் இரவில், மேலும் மேலும் சுடர்விடுவதற்கும், அந்த ஒளியை நாம் மகிழ்வோடு வரவேற்பதற்கும் அன்னை மரியா, நமக்கு உதவுவாராக என்று சொல்லி, அனைத்து திருப்பயணிகளை, சிறப்பாக,  குவாதலூப்பே அன்னை மரியாவைப் பாதுகாவலராகக் கொண்டிருக்கும் இலத்தீன் அமெரிக்கர்களை வாழ்த்தி, தனது அப்போஸ்தலிக்க ஆசிரை அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

12 December 2018, 14:49