தேடுதல்

திருத்தந்தையின் டிசம்பர் மாத செபக்கருத்து, காணொளியாக திருத்தந்தையின் டிசம்பர் மாத செபக்கருத்து, காணொளியாக 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டிசம்பர் மாத செபக்கருத்து

மத நம்பிக்கையை பிறருக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டிருப்போருக்காக செபிக்கும்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் மாத செபக்கருத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உங்கள் நம்பிக்கையை மற்றவர்களோடு சொற்களால் பகிர்ந்துகொள்ள விழைந்தால், அவர்களுக்கு கவனமுடன் செவிமடுப்பது அவசியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் மாதம் வெளியிட்டுள்ள தன் செபக்கருத்தில் கூறியுள்ளார்.

டிசம்பர் 6, இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட காணொளியில், மத நம்பிக்கையை பிறருக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டிருப்போருக்காக செபிக்கும்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இயேசு சபையினரால் ஒருங்கிணைக்கப்படும் செபத்தின் திருத்தூதுப்பணி என்ற அமைப்பு, திருத்தந்தையின் செபக்கருத்துக்களை ஒவ்வொரு மாதமும், The Pope Video என்ற காணொளி குறும்படத்தின்  வழியே வெளியிட்டு வருகிறது.

டிசம்பர் மாதத்திற்கென திருத்தந்தை தெரிவு செய்துள்ள கருத்தை, அவர் இஸ்பானிய மொழியில் விளக்கும் வேளையில், தங்கள் மத நம்பிக்கையை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள இளையோர் குழுவொன்று, முயற்சிகள் மேற்கொள்வது தொடர்பான காட்சிகள் இந்தக் காணொளியில் இடம்பெறுகின்றன.

மத நம்பிக்கையை மற்றவர்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டிருப்போர், கலாச்சாரத்துடன் கொள்ளும் உரையாடலில், இன்றைய காலத்திற்கு உகந்த ஒரு மொழியைக் கண்டுபிடிக்கவும், மக்களின் இதயங்களோடு அவர்கள் மேற்கொள்ளும் உரையாடலில், பிறருக்கு அதிகமாக செவிமடுக்கவும் வேண்டுமென மன்றாடுவோம் என்ற விண்ணப்பத்தை, திருத்தந்தை தன் டிசம்பர் மாத செபக்கருத்தாக வெளியிட்டுள்ளார்.

மேலும், இவ்வியாழனன்று, சாந்தா மார்த்தா இல்லத்தில் வழங்கிய மறையுரையின் தொடர்ச்சியாக, "சொல்லுதலா செயல்படுபடுதலா? நம் வாழ்வு கிறிஸ்து என்ற பாறையில் கட்டப்பட்டுள்ளதா, அல்லது உலகப் பெருமைகள் என்ற மணலில் கட்டப்பட்டுள்ளதா? மரியாவின் புகழ்ப்பாடலால் என் வாழ்வு தூண்டப்படுகிறதா?" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 December 2018, 15:11