தேடுதல்

இத்தாலியில், தேசிய பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோர் சந்திப்பு இத்தாலியில், தேசிய பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோர் சந்திப்பு  

பாதுகாப்பு பணிகளை ஆற்றுவோருக்கு திருத்தந்தை நன்றி

குடிமக்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளோர், தேசிய எல்லைகளுக்கு அப்பாலும் பணியாற்ற வேண்டிய அவசியம் அதிகரித்து வருகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இயற்கைப் பேரிடர்களில் பலியானவர்கள் மற்றும் அப்பேரிடர்களின்போது இடர்துடைப்புப் பணியாற்றுகையில் இறந்தோர் ஆகிய அனைவரையும், இச்சனிக்கிழமையன்று நினைவுகூர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியில், தேசிய பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு துறைகளின் ஏறக்குறைய ஏழாயிரம் பேரை, இச்சனிக்கிழமையன்று, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து, கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டு, உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பணியாளர்களின் அர்ப்பணத்தையும், மனத்தாராளத்தையும் பாராட்டினார்.

இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் சேதங்களிலிருந்து மக்களின் வாழ்வையும், சொத்துக்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டிய கடமையை, இந்தப் பணியாளர்கள் கொண்டிருக்கின்றனர் என்றும் உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பொது மக்கள் பாதுகாப்பு என்பது, அவசரகால நெருக்கடிகளில் செயல்படுவது மாத்திரமல்ல, மாறாக, பேரிடர்களைத் தடுக்கவும், அவை பற்றி முன்னெச்சரிக்கை அளிக்கவும், பாதிக்கப்பட்டவர்கள், சாதாரண வாழ்வுக்குத் திரும்ப உதவுவதும் ஆகும் எனவும், திருத்தந்தை கூறினார்.   

இவ்விவகாரத்தில், வருங்கால குடிமக்களும், தன்னார்வலர்களுமாகிய சிறாரும், இளையோரும், பயிற்றுவிக்கப்பட வேண்டியது அவசியம் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயற்கையை அன்புகூர்ந்து, அதனைப் பாதுகாப்பதற்கும், இப்பூமி அனைவரும் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அமைவதற்கு, நல்லிணக்க வாழ்வின் விழுமியங்களைப் பரப்புவதற்கும், தான் இளையோரைச் சந்திக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.  குடிமக்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளோர், தேசிய எல்லைகளுக்கு அப்பாலும் பணியாற்ற வேண்டிய அவசியம் அதிகரித்து வருவதையும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பணி, பொதுவாழ்வில் ஏனைய துறைகளில் வாழ்வோருக்கும் தூண்டுதலாக அமையும் எனவும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2018, 14:43