குவாதலூப்பே அன்னை மரியாவிடம் செபிக்கின்றார்,  திருத்தந்தை பிரான்சிஸ் குவாதலூப்பே அன்னை மரியாவிடம் செபிக்கின்றார், திருத்தந்தை பிரான்சிஸ் 

குவாதலூப்பே அன்னை மரியா திருநாள் திருப்பலி

டிசம்பர் 12ம் தேதி சிறப்பிக்கப்பட்ட குவாதலூப்பே அன்னை மரியாவின் திருநாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காவில் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 12ம் தேதி, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட குவாதலூப்பே அன்னை மரியாவின் திருநாளையொட்டி, மாலை ஆறு மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் சிறப்புத் திருப்பலியை தலைமையேற்று நடத்தினார்.

மெக்சிகோவின் பழங்குடியினத்தைச் சேர்ந்த எளிய விவசாயி, யுவான் தியேகோ என்பவர், கத்தோலிக்க மறையைத் தழுவியதைத் தொடர்ந்து, அவருக்கு அன்னை மரியா தோன்றினார் என்பதும், 1531ம் ஆண்டு, டிசம்பர் 12ம் தேதி, ரோசா மலர்கள் பூக்க இயலாத காலத்தில் யுவான் தியேகோ அம்மலர்களைத் திரட்டி ஆயரிடம் சமர்ப்பித்ததன் வழியே, அன்னையின் புதுமையை ஆயர் உணர்ந்தார் என்பதும் இத்திருநாளின் பின்னணியாக அமைந்துள்ளன.

குவாதலூப்பே அன்னை மரியாவின் பக்தி, இலத்தீன் அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் அதிகமாகப் பரவியுள்ளது.

இதற்கிடையே, இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிரிகாகுளம் மறைமாவட்டத்தின் ஆயர், Addagatla Innayya Chinna அவர்கள், பணிஓய்வு பெறுவதற்கு விடுத்த விண்ணப்பத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 12, இப்புதனன்று ஏற்றுக்கொண்டார்.

82 வயதான ஆயர் Innayya Chinna அவர்கள், 1965ம் ஆண்டு அருள் பணியாளராகவும், 1989ம் ஆண்டு ஆயராகவும் அருள் பொழிவு பெற்று, நல்கொண்டா மறைமாவட்டத்தின் ஆயராக நான்கு ஆண்டுகளும், சிரிகாகுளம் மறைமாவட்டத்தின் ஆயராக, 1993ம் ஆண்டு முதல், கடந்த 25 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2018, 15:38