இயேசு சபை இளந்துறவிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் இயேசு சபை இளந்துறவிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

நடப்படுதலும், வளர்ச்சியும், முதிர்ச்சி நோக்கி அடியெடுத்தலும்

நமக்காக வாழ்வதற்கல்ல, மாறாக, இறைவனுக்காக வாழவும், இவ்வுலகில் உதவித் தேவைப்படுவோருக்குப் பணிபுரியவும் அழைக்கப்பட்டுள்ளோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நமக்காக வாழவேண்டும் என்ற சோதனைகளைக் களைந்து, தந்தையாம் இறைவனுக்காக நாம் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியதை, யூபிலிக் கொண்டாட்டம் உரைக்கிறது என, தன்னைச் சந்திக்க வந்திருந்த, இயேசு சபை இளந்துறவிகளிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரில் இயேசு சபையினரின் 'ஜேசு கல்லூரி' துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டு ஜூபிலிக் கொண்டாடங்களையொட்டி, அங்கு பயிற்சி பெறும் இயேசு சபை குருத்துவ மாணவர்களை இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவைப்போல், பிறருக்குச் சேவை புரியவே நாம் உள்ளோம் என்பதை நினைவுகூர்வதாக நம் கொண்டாட்டங்கள் இருக்கட்டும் என்றார்.

'உங்களை கடவுளில் நிறுவுங்கள்' என்ற புனித பிரான்சிஸ் சேவியரின் வார்த்தைகளையும், அப்புனிதரின் திருவிழாவான இத்திங்களன்று, குருத்துவ மாணவர்களிடம் எடுத்துரைத்த திருத்தந்தை, புனித இஞ்ஞாசியார் வாழ்ந்த, இயேசு சபையின் கொல்கை நூலை எழுதிய, மற்றும், இயேசு சபையின் முதல் மறைபோதகர்களை உலகில் பணியாற்ற அனுப்பிய இடத்தில் ஊன்றப்பட்டுள்ள நீங்கள், இயேசு சபையை திருஅவையின் இதயத்திற்குள்ளும், திருஅவையை இயேசு சபையின் இதயத்திற்குள்ளும் கொணர்பவர்கள் என்றார்.

குருத்துவ பயிற்சி பெறும் ஒவ்வொரு மாணவரும் வளர வேண்டியவர்கள் என்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வளர்ச்சியின் இரு நல்ல அடையாளங்களாக, விடுதலை மற்றும் கீழ்ப்படிதலைக் குறிப்பிட்டார்.

நிறுவப்படுதலும், வளர்ச்சியும், வாழ்வில் முதிர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்பவை என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2018, 16:04