தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை - 191218 புதன் மறைக்கல்வியுரை - 191218 

மறைக்கல்வியுரை : கிறிஸ்து பிறப்பின் ஆச்சரியங்களுக்கு திறந்திடுக‌

அனைத்திலும் மிக உயர்ந்ததாக இருக்கும் ஆச்சரியம் என்னவெனில், ஏழ்மையிலும் தாழ்நிலையிலும், ஒரு குழந்தையாக, கடவுளே பிறப்பெடுத்ததாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருவருகைக்காலத்தின் இறுதிப்புதனான இன்று, உரோம் நகரில் சூரிய ஒளி, மிக அதிகமாக இருந்தாலும், குளிரின் அளவும் அதிகமாகவே இருக்க, திருப்பயணிகளின் நலன் கருதி, இன்றைய புதன் மறைக்கல்வி உரை, புனிதத் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலேயே இடம்பெற்றது. திருப்பயணிகளால் அரங்கம் முழுவதும் நிரம்பியிருக்க, வரவிருக்கும் கிறிஸ்து பிறப்பு விழாவின் முக்கியத்துவம் குறித்து, தன் மறைக்கல்வி சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். முதலில், புனித யோவான் நற்செய்தியின் முதல் பிரிவிலிருந்து 9 முதல் 12 முடிய உள்ள இறை வாக்கியங்கள் வாசிக்கப்பட்டன.

யோவான் நற்செய்தி 1: 9-12

‘அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்’.

இந்த வாசகத்தைத் தொடர்ந்து, திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வு இடம்பெற்றது.

அன்பு சகோதர சகோதரிகளே! இன்னும் சில நாட்களில் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடவிருக்கிறோம். ஓய்வின்றி, சுறுசுறுப்பாக இயங்கும் இக்காலக்கட்டத்தில், இத்திருவிழாவை நாம் எவ்விதத்தில் கொண்டாடவேண்டும் என, நமதாண்டவர் விரும்புவார் என, நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம்.

முதல் கிறிஸ்து பிறப்பு நாளை நாம் நோக்கினோமென்றால், அங்கு, கடவுள் வழங்கிய ஆச்சரியங்களே நிறைந்திருந்தன. ஆண்டவரின் தூதர் அன்னைமரியாவை சந்தித்தது, அன்னமரியாவை ஏற்றுக்கொள்ளும்படி புனித யோசேப்புக்கு உரைக்கப்பட்டது, அன்னைமரியாவின் குழந்தைக்கு தந்தையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது, திருக்குடும்பத்தை அழைத்துக்கொண்டு எகிப்துக்கு செல்லும்படி கட்டளையிடப்பட்டது,  என ஆச்சரியங்கள் நிறைந்திருந்தன. ஆனால். அனைத்திலும் மிக உயர்ந்ததாக இருந்த ஆச்சரியம் என்னவெனில், கடவுளே, ஏழ்மையிலும் தாழ்நிலையிலும், ஒரு குழந்தையாக பிறப்பெடுத்ததாகும். கிறிஸ்து பிறப்பு விழா, இவ்வுலகையே மாற்றியமைக்கிறது.

தன்னையேக் கையளிக்கும் இறைவனின் அன்பு குறித்து எடுத்துரைக்கும்   இப்பெருவிழா, நம் வாழ்வுக்கும், நாம் பிறரோடு கொண்டிருக்கும் உறவுக்கும் ஒரு தூண்டுதலாக இருக்கவேண்டும். அன்னை மரியாவின் நம்பிக்கை நிறைந்த விசுவாசத்தையும், இறைவிருப்பத்திற்கு தன்னை முற்றிலும் வழங்கியவராகச் செயல்பட்ட புனித யோசேப்பின் நிலையையும் பின்பற்றுவதன் வழியாக, இந்த கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் சிறந்த முறையில் கொண்டாடமுடியும்.

அதேவேளை, இந்த ஓய்வற்ற காலக்கட்டத்திலும் நம் இதயங்களை இறைவனை நோக்கித் திறந்து, அவருக்கு அங்கு ஓர் இடம் தயாரிக்கக் கேட்கும் இறைக்குரலுக்கு செவிமடுப்பதன் வழியாக, இத்திருவிழாவை நாம் சிறப்பான விதத்தில் கொண்டாட முடியும். கிறிஸ்து பிறப்பு விழாக் கொண்டாட்டங்களில் பரபரப்பாக இருக்கும் நாம், யாரின் பிறப்பைக் கொண்டாட உள்ளோமோ அவரை மறந்திடாமல் இருப்போம். நம்மைப்போல் உடலெடுத்து ஏழ்மையில் பிறந்த இறைமகனை வழிபடும் வேளையில், நம்மைச் சுற்றி வாழும் ஏழைகளையும், தேவையிலிருப்போரையும் நினைவில் கொள்வோம்.

இந்த கிறிஸ்து பிறப்பு விழாவில், நீங்களும் உங்கள் குடும்பத்தவரும், வானதூதர்கள் அறிவித்த மகிழ்வையும் சமாதானத்தையும் அனுபவித்து, இறைவன் வழங்கும் மிக உன்னத ஆச்சரியங்களுக்கு உங்களைத் திறந்தவர்களாக செயல்படுவீர்களாக.

இவ்வாறு, கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் வாழ்த்துக்களையும், அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2018, 15:30