தேடுதல்

Vatican News
புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருக்குடும்ப திருஉருவத்தைத் தாங்கிய பக்தர் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருக்குடும்ப திருஉருவத்தைத் தாங்கிய பக்தர்  (ANSA)

காங்கோ குடியரசுக்காக திருத்தந்தையின் விண்ணப்பம்

காங்கோ குடியரசில் நடைபெறும் தேர்தல்கள் வன்முறைகள் இன்றி நடைபெறவேண்டும் என்றும், அந்நாட்டை அச்சுறுத்தி வரும் எபோலா நோயிலிருந்து அம்மக்களைக் காக்கும்படியாகவும் திருத்தந்தை விடுத்த விண்ணப்பம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 30 இஞ்ஞாயிறு கொண்டாடப்பட்ட திருக்குடும்பத் திருவிழாவன்று, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, இவ்வுரையின் இறுதியில், காங்கோ குடியரசுக்காக சிறப்பான வேண்டுதல் விண்ணப்பங்களை முன்வைத்தார். 

காங்கோ குடியரசில், இஞ்ஞாயிறன்று நடைபெற்றுவரும் தேர்தல்கள் வன்முறைகள் இன்றி நடைபெறவேண்டும் என்றும், அந்நாட்டை அச்சுறுத்தி வரும் எபோலா நோயிலிருந்து அம்மக்களைக் காக்கும்படியாகவும் அன்னை மரியாவின் பரிந்துரையைத் தேடுவோம் என்று கூறிய திருத்தந்தை, அனைவரோடும் இணைந்து, 'அருள்நிறை மரியாவே வாழ்க' என்ற செபத்தை செபித்தார்.

மேலும், வளாகத்தில் கூடியிருந்த அனைவருக்கும், திருக்குடும்பத் திருவிழா வாழ்த்துக்களை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வளாகத்திற்கு வருகை தந்திருக்கும் குடும்பங்கள், மற்றும், தொலைக்காட்சி வழியே மூவேளை செப உரைக்கு செவிமடுக்கும் குடும்பங்கள் அனைவருக்கும் நம் வாழ்த்துக்களை கரவொலி எழுப்பி தெரிவிப்போம் என்று கூறியதும், வளாகத்தில் கூடியிருந்தோர் அனைவரும் உற்சாகமாகக் கரவொலி எழுப்பினர்.

ஆண்டின் நிறைவை நெருங்கியுள்ள அனைவரும், இவ்வாண்டின் இறுதி இரு நாள்களை மன அமைதியுடன் செலவிட தன் வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை, இவ்வாண்டு முழுவதும் தனக்காகச் செபித்து வந்த அனைவருக்காகவும் தன் நன்றியை தெரிவித்தார்.

31 December 2018, 11:50