தேடுதல்

Vatican News
திருக்குடும்பத் திருவிழாவன்று மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை திருக்குடும்பத் திருவிழாவன்று மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை  (AFP or licensors)

மரியாவும் யோசேப்பும் வெளிப்படுத்திய வியப்பும், ஆதங்கமும்

நம் வாழ்வில், செபிக்காமல், நற்செய்தியை வாசிக்காமல், மூன்று நாள்கள் செலவழித்தால், இயேசு, நம் வாழ்விலும் காணாமல் போய்விடுவார் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

12 வயது சிறுவன் இயேசுவை இழந்து, அன்னை மரியாவும், யோசேப்பும் அடைந்த மூன்று நாள் துன்பம், இறைவனை விட்டு விலகிச் செல்லும் நேரங்களில், நாம் உணரவேண்டிய துன்பம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.

டிசம்பர் 30, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட திருக்குடும்பத் திருவிழாவன்று, புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, திருப்பலியில், வழங்கப்பட்ட நற்செய்தியை மையப்படுத்தி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

மூன்று நாள் தேடலுக்குப் பின் எருசலேம் கோவிலில் சிறுவன் இயேசுவைக் கண்ட மரியாவும், யோசேப்பும், தங்கள் மகன், போதகர்கள் நடுவே அமர்ந்து பேசியதைக் கண்டு, அவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர் (லூக்கா 2:48) என்று நற்செய்தியில் கூறப்பட்டுள்ளதை, தன் மூவேளை செப உரையில் சிறப்பாகக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வியப்பு என்ற பண்பு, நம்மைச் சுற்றி நடப்பதை, திறந்த மனதுடன் அணுகும் பக்குவத்தை வெளிப்படுத்துகிறது என்று கூறினார்.

இயேசுவைக் காணாததால், மரியாவும் யோசேப்பும், ஆதங்கத்துடன் அவரைத் தேடினர் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நம் வாழ்வில், செபிக்காமல், நற்செய்தியை வாசிக்காமல், மூன்று நாள்கள் செலவழித்தால், இயேசு நம் வாழ்விலும் காணாமல் போய்விடுவார் என்றும், அவ்வேளையில், அவரை நாம் ஆதங்கத்துடன் தேடவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

வியப்பு, ஆதங்கம் என்ற இரு சொற்களை நாம் இன்று நம் இல்லங்களுக்கு கொண்டு செல்வோம் என்று தன் மூவேளை செப உரையின் இறுதியில் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு காரணங்களுக்காக, அமைதியையும், புரிதலையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்காக செபிப்போமாக என்று தன் உரையை நிறைவு செய்தார்.

31 December 2018, 11:44