தேடுதல்

திருவருகைக் கால மெழுகுதிரிகள் திருவருகைக் கால மெழுகுதிரிகள் 

இறைவனின் மகிமைநிறை திருவருகைக்காக அழைக்கும் காலம்

கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவத்தை உணராமல், அதை ஒரு நுகர்வுக் கலாச்சார திருவிழாவாக வரவேற்போமெனில், நம்மைக் கடந்துசெல்லும் இயேசுவை அடையாளம் காணத் தவறிவிடுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருவருகையின் திருவழிபாட்டுக் காலத்தில், நாம், கிறிஸ்து பிறப்புக்காகத் தயாரித்துவரும் வேளையில், இறைவனின் மகிமை நிறை வருகைக்காக, அதாவது, நம் இறுதி சந்திப்புக்காக தயாரிக்க அழைப்புப் பெற்றுள்ளோம் என, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தன்னலத்தை மையமாகக் கொண்ட வாழ்வு முறையிலிருந்து விலகி, புதிய வருங்காலத்திற்கான நம் கனவுகளையும் நம்பிக்கைகளையும் உரமிட்டு வளர்க்க, இந்த திருவருகைக் காலத்தின் நான்கு வாரங்களையும் பயன்படுத்துவோம், என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விழித்திருந்து செபிப்பதே, இக்காலத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது என்று கூறினார்.

ஏழைகளையும் கைவிடப்பட்டோரையும், பலவீனர்களையும் நம் சகோதரர்களாக ஏற்று, அவர்களின் தேவைகளை நிறைவேற்ற உழைக்கும் வகையில், நம் மனதையும் இதயத்தையும் திறக்கவேண்டும் என திருவருகைக் காலம் அழைப்பு விடுக்கிறது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனின் பிறப்பிற்காக காத்திருக்கும் இந்நாட்கள், செபத்தின் காலமாக இருக்கட்டும் எனவும் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து பிறப்பு விழாவை ஒரு நுகர்வு கலாச்சார திருவிழாவாக நாம் கருதினால், நம்மைக் கடந்துசெல்லும் கிறிஸ்துவை நாம் காணத் தவறிவிடுவோம் என்ற எச்சரிக்கையையும் முன் வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2018, 13:12