தேடுதல்

மூவேளை செப உரை வழங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் மூவேளை செப உரை வழங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருமுழுக்கு யோவான் வழங்கும் திருவருகைக்கால அழைப்பு

சமுதாயத்தில் நிலவும் மேடு பள்ளங்களை சமமாக்க வேண்டுமென்று புனித யோவான் வழங்கும் அழைப்புக்கு செவிமடுப்போமாக - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் பின்பற்றிவரும் திருவருகைக்காலத்தை இன்னும் பொருளுள்ள வகையில் சிறப்பிக்க, திருமுழுக்கு யோவான் வழங்கியுள்ள எடுத்துக்காட்டைப் பின்பற்ற முயல்வோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையில் கேட்டுக்கொண்டார்.

திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான டிசம்பர் 9ம் தேதி, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த 45,000த்திற்கும் அதிகமான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, மேடு பள்ளங்களை சமமாக்க வேண்டுமென்று புனித யோவான் வழங்கும் அழைப்புக்கு செவிமடுப்போமாக என்று கூறினார்.

அக்கறையற்ற நிலையால், இவ்வுலகில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகியுள்ளன என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அயலவரின் தேவைகளை உணரும்போதுதான், நாம் உருவாக்கியுள்ள பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும் என்று கூறினார்.

குழிகளும், ஓட்டைகளும் நிறைந்த பாதையில் நம்மால் பயணம் செய்ய இயலாது என்பதை ஓர் எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அன்பற்ற, அக்கறையற்ற வாழ்க்கையால், நம் உள்ளங்களில் ஓட்டைகள் உருவாகியிருந்தால், அவற்றை நிரப்புவதற்கு, திருவருகைக் காலம் நல்லதொரு தருணம் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

உண்மையை எடுத்துரைப்பதில் சிறிதும் தயங்காமல் வாழ்ந்த புனித திருமுழுக்கு யோவானைப் போல, இன்றைய கிறிஸ்தவர்களும், அச்சுறுத்தும் சூழல்களிலும், உண்மையை உயர்த்திப்பிடிக்க அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை, தன் மூவேளை செப உரையின் இறுதியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2018, 13:00