தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் கர்தினால் இரவாசி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் கர்தினால் இரவாசி 

பாப்பிறைக் கல்விக்கழகங்களின் கூட்டம் – திருத்தந்தை செய்தி

"இறந்தோரின் உயிர்ப்பையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன்" என்று நம் விசுவாசப் பிரமாணத்தில் கூறுவது, வாழ்வைக் குறித்து நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரில், டிசம்பர் 4, இச்செவ்வாய் மாலை நடைபெற்ற பாப்பிறைக் கல்விக்கழகங்களின் 23வது ஆண்டு கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்.

1995ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களால் துவக்கப்பட்ட, பாப்பிறைக் கல்விக்கழகங்கள் என்ற அமைப்பின் தலைவராக, தற்போது பணியாற்றும், கர்தினால் ஜியான்பிராங்கோ இரவாசி அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பிய இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வாசித்தார்.

"முடிவற்ற காலம், வாழ்வின் மற்றொரு முகம்" என்ற மையக்கருத்து, இவ்வாண்டு நடைபெறும் 23வது ஆண்டுக்கூட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதற்கு, திருத்தந்தை தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

"இறந்தோரின் உயிர்ப்பையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன்" என்று நம் விசுவாசப் பிரமாணத்தில் ஒவ்வொரு முறையும் கூறுவது, வாழ்வைக் குறித்து நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று தன் செய்தியில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறு உலகில் நாம் அடையவிருக்கும் வாழ்வு, வெறும் இறையியல் கருத்து மட்டுமல்ல, மாறாக, அதுவே நம் நம்பிக்கையின் அடித்தளங்களில் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வையும், மறு உலகையும் மறுக்கவும், மறக்கவும் தூண்டும் இன்றைய கலாச்சாரம், இவ்வுலகைக் கடந்த பல்வேறு உண்மைகளைக் காண மறுத்து, இவ்வுலக வாழ்வின் மீது மட்டும் நம் கவனங்களைத் திருப்புவது, நம் வாழ்வை வெறுமையாக்குகிறது என்று திருத்தந்தை இச்செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

முடிவற்ற காலத்தையும், மறு உலக வாழ்வையும், குறித்து, திருஅவையின் தந்தையர் கூறியுள்ள எண்ணங்கள், துடிப்பு மிகுந்தவையாகவும், நம்மை கவர்ந்திழுப்பவையாகவும் அமைந்துள்ளன என்பதை, தன் செய்தியில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அழகான இவ்வுண்மைகளை இன்றைய உலகம் காண்பதற்கு, பாப்பிறைக் கல்விக் கழகங்கள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

05 December 2018, 15:36