தேடுதல்

பாலியல் குற்றச்சாட்டினால் பாதிக்கப்பட்ட சிலே நாட்டு ஆயர்களைச் சந்தித்த திருத்தந்தை பாலியல் குற்றச்சாட்டினால் பாதிக்கப்பட்ட சிலே நாட்டு ஆயர்களைச் சந்தித்த திருத்தந்தை 

பாலியல் வழியில் துன்பமடைந்தோருடன் திருத்தந்தையர்

பாலியல் வழியில் துன்பமடைந்தோருக்கு செவிமடுப்பது மிகவும் முக்கியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அருள் பணியாளர்களாலும், ஆயர்களாலும் பாலியல் வழியில் துன்பமடைந்தோரின் பிரச்சனைகளை மையப்படுத்தி, 2019ம் ஆண்டு, பிப்ரவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஒரு முக்கிய கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளோர், இக்கூட்டத்திற்கு வருவதற்கு முன், இத்துன்பத்தை அடைந்தோரை சந்திப்பது முக்கியம் என்ற எண்ணத்தை, இக்கூட்டத்தை ஏற்பாடு செய்யும் குழு பரிந்துரை செய்துள்ளது.

பாலியல் வழியில் துன்பமடைந்தோருக்கு செவிமடுப்பது மிகவும் முக்கியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரித்தானியா, மால்டா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளைகளில், பாலியல் வழியில் துன்பமடைந்தோரை, ஊடகங்களின் கவனத்தை ஈர்க்காமல் சந்தித்துள்ளார்.

அதேபோல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தான் செல்லும் பயணங்களில் பலமுறை, இத்தகைய துன்பமடைந்தோரை சந்தித்ததோடு, அவர்களில் சிலரை, வத்திக்கானில், சாந்தா மார்த்தா இல்லத்திலும் அவர் சந்தித்துள்ளார்.

2015ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஃபிலடெல்ஃபியா நகரில், உலக குடும்பங்கள் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு, பாலியல் கொடுமையை அடைந்தோரை சந்தித்தபின், அவர்களில் பலர், இரக்கத்தின் பணியாளர்களாகவும், நம்பிக்கையின் தூதர்களாகவும் மாறியுள்ளனர் என்று கூறினார்.

தன் சிறு வயதில், பாலியல் கொடுமையை அடைந்த Daniel Pittet என்பவர், "தந்தையே, உங்களை மன்னிக்கிறேன்" ("La perdono, padre") என்ற தலைப்பில், 2017ம் ஆண்டு வெளியிட்ட நூலுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய அணிந்துரையில், இந்நூலின் ஆசிரியர், தன் மௌனத்தை உடைத்திருப்பது, பலருக்கு உதவியாக உள்ளது என்று கூறியிருந்தார்.

2018ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிலே நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்திலும், அதைத் தொடர்ந்து, வத்திக்கானில் நடைபெற்ற சிலே ஆயர்களின் கூட்டத்திலும், இந்தப் பிரச்னையை அவர் சந்தித்த விதமும், இப்பிரச்சனையின் ஆழத்தை புரிந்துகொள்ளாமல் தான் இருந்ததற்கு மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கன.

பாலியல் வழியில் துன்பங்களை அடைந்தோரை மையப்படுத்தி, 2018ம் ஆண்டு, ஆகஸ்ட் 20ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் "இறை மக்களுக்கு மடல்" என்ற தலைப்பில் வெளியிட்ட மடலில், திருஅவையின் ஒரு உறுப்பினர் துன்புறும்போது, நாம் அனைவரும் துன்புறுகிறோம் என்பதை தெளிவாக வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2018, 15:59