தேடுதல்

குவாதலூப்பே அன்னை மரியா திருநாள் திருப்பலியில் திருத்தந்தை  மறையுரை குவாதலூப்பே அன்னை மரியா திருநாள் திருப்பலியில் திருத்தந்தை மறையுரை 

குவாதலூப்பே அன்னை மரியா திருநாள் - திருத்தந்தையின் மறையுரை

தன் புகழை அல்ல, மாறாக, இறைவனின் புகழைப் பரப்புவதே முக்கியம் என்ற சிறந்த பாடத்தை, அன்னை மரியாவின் பள்ளியில் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தன் புகழ்ப்பாடல் வழியே (லூக்கா 1:46-48) அன்னை மரியா, நற்செய்தியின் முதல் பாடங்களை நம் அனைவருக்கும் சொல்லித் தருகிறார் என்றும், இறைவனின் கருணையைப் பாடுவதற்கு நம்மையும் அழைக்கிறார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குவாதலூப்பே அன்னை மரியா திருநாளன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

டிசம்பர் 12, இப்புதனன்று கொண்டாடப்பட்ட குவாதலூப்பே அன்னை மரியா திருநாளன்று, மாலை 6 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை, தலைமையேற்று நிகழ்த்திய திருப்பலியில், அன்னை மரியா வழங்கும் நம்பிக்கை பாடங்களைப் பற்றி தன் மறையுரையில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

நடத்தல், பாடுதல் என்ற இரு வழிகளில் அன்னை மரியா நமக்குப் பாடங்களை வழங்குகிறார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று, புனித யுவான் தியேகோவுடன் நடந்து சென்ற அன்னை மரியா, பின்னர், இலத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றில் தன் நடைப்பயணத்தை மக்களுடன் மேற்கொண்டார் என்று சுட்டிக்காட்டினார்.

மரியாவுடன் சேர்ந்து நாமும், இன்றைய நகரங்கள் வழியே நடந்து, மக்களின் இதயங்களில் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்று தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

தன் உள்ளத்து மகிழ்வையும், நன்றியையும் பாடலாக வெளியிட்ட அன்னை மரியா, இன்றும், குரல் எழுப்ப இயலாதவர்கள் சார்பில் தன் பாடல்களை எழுப்பி வருகிறார் என்றும், எளிய விவசாயி யுவான் தியேகோவின் வழியே மரியா வழங்கிய பாடல், தொடர்ந்து உலகில் ஒலித்துவருகிறது என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

தன் புகழை அல்ல, மாறாக, இறைவனின் புகழைப் பரப்புவதே முக்கியம் என்ற சிறந்த பாடத்தை, அன்னை மரியாவின் பள்ளியில் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையின் இறுதியில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2018, 15:41