தேடுதல்

Telepace உயர் மட்ட அதிகாரிகள் சந்திப்பு Telepace உயர் மட்ட அதிகாரிகள் சந்திப்பு 

Telepace தொலைக்காட்சி நிறுவனத்தை வாழ்த்திய திருத்தந்தை

குரலற்றவர்களுக்கு குரல் கொடுப்பதை தன் நோக்கமாகக் கொண்டிருக்கும் Telepace நிறுவனம், இந்த உன்னத நோக்கத்தை இன்னும் தீவிரமான முறையில் பின்பற்றவேண்டும் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மக்களுக்கு அருகில் இருப்பதும், இறைவனுக்கும், திருஅவை வாழ் மனிதருக்கும் உண்மையான பணியாற்றுவதும், Telepace தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பான அழைப்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தொலைக்காட்சி நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகளிடம் கூறினார்.

இத்தாலியில் இயங்கிவரும் Telepace கத்தோலிக்க தொலைக்காட்சி நிறுவனம், தன் 40 ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் இவ்வேளையில், இந்நிறுவனத்தின் 140 உயர் மட்ட அதிகாரிகளை, டிசம்பர் 13, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இந்நிறுவனம் ஆற்றிவரும் பணிகளுக்கு தன் பாராட்டுக்களை வழங்கினார்.

இத்தாலியின் ஒரு சிறு பகுதியில், எளிய முறையில் துவக்கப்பட்ட Telepace நிறுவனம், குரலற்றவர்களுக்கு குரல் கொடுப்பதை தன் நோக்கமாகக் கொண்டிருந்தது என்று கூறியத் திருத்தந்தை, இந்த உன்னத நோக்கத்தை, அவர்கள், இன்னும் தீவிரமான முறையில் பின்பற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திருத்தந்தையின், புதன் மறைக்கல்வி உரை, மூவேளை செப உரை, மற்றும் திருத்தந்தை நிறைவேற்றும் சிறப்புத் திருப்பலிகளை, மக்களின் இல்லங்களுக்குக் கொண்டு செல்லும் Telepace தொலைக்காட்சி நிறுவனம், திருப்பீடத்துடன் மிக ஆழமான உறவு கொண்டுள்ளது என்பதை, தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆன்மீகத்தின் 'ஆன்டென்னா' அதாவது, 'உணர் கம்பி'யாக செயல்படுதல், அர்ப்பண உணர்வுடன் பணியாற்றுதல், அர்த்தமற்ற புறங்கூறுதலை விடுத்து, உண்மைகளை எடுத்துரைத்தல் என்ற மூன்று பணிகளை Telepace நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை தன் வாழ்த்துரையில் அழைப்பு விடுத்தார்.

குறிப்பாக, இளையோரை நற்செய்தியின் பள்ளியில் வளர்ப்பதற்கு, இத்தொலைக்காட்சி நிறுவனம் கூடுதலான அர்ப்பணத்துடன் உழைக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பம் விடுத்தார்.

இன்னும் சில நாள்களில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடவிருப்பதை, தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டத் திருத்தந்தை, சமாதானத்தின் வாய்க்காலாக விளங்கிய குழந்தை இயேசுவின் எளிய, அமைதியான பார்வை, நம் உள்ளங்களைத் துளைத்துச் செல்லட்டும், என்ற ஆசி மொழியுடன், திருத்தந்தை, தன் வாழ்த்துரையை நிறைவு செய்தார்.

1979ம் ஆண்டு, இத்தாலியில் துவக்கப்பட்ட Telepace தொலைக்காட்சி நிறுவனம், தற்போது, செர்னா (Cerna) என்ற நகரில், தன் தலைமையகத்தைக் கொண்டு செயலாற்றுகிறது. இதன் கிளைகள், பாத்திமா, எருசலேம் உட்பட, உலகின் இன்னும் சில நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2018, 15:24