தேடுதல்

Mercedarian துறவு சபையின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை Mercedarian துறவு சபையின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை 

Mercedarian துறவு சபையினரை வாழ்த்திய திருத்தந்தை

சிறைப்பட்ட கிறிஸ்தவர்களின் விடுதலைக்கென உருவாக்கப்பட்ட Mercedarian துறவு சபை, இன்றைய உலகில் பல்வேறு வழிகளில் சிறைப்பட்டுள்ள கிறிஸ்தவர்களை விடுவிக்க, சிறப்பான முறையில் அழைக்கப்பட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இரக்கத்தின் உருவாகவும், சிறைப்பட்டோரின் விடுதலையாகவும் விளங்கும் அன்னை மரியாவின் துறவு சபை உறுப்பினர்கள், தங்கள் எட்டாவது நூற்றாண்டின் நினைவைக் கொண்டாடிவரும் இவ்வாண்டில், டிசம்பர் 6, இவ்வியாழன் காலை, திருத்தந்தையைச் சந்திக்க வந்திருந்தனர்.

Mercedarian துறவிகள் என்றழைக்கப்படும் இத்துறவு சபையின் பிரதிநிதிகள் 120 பேரை, இவ்வியாழன் காலை வத்திக்கானின் கிளெமெந்தீனா அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்துறவு சபை கடந்து வந்த பாதையில், இறைவனின் இரக்கம் அவர்களோடு துணை வந்ததை எண்ணி நன்றி கூறும் நேரம் இது என்று கூறினார்.

மிகவும் ஆபத்தானச் சூழலில் வாழும் கிறிஸ்தவர்களைக் காப்பதற்கு, இத்துறவு சபையினர் தங்கள் உயிரையும் பணயம் வைக்க முன்வரும்படி, இச்சபையின் சட்டங்கள் கூறுவதை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, கிறிஸ்துவை முழுமையாகப் பின்பற்றுவதென்பது, உயிரையும் வழங்க விடுக்கப்படும் அழைப்பு என்பதை, இத்துறவு சபை உலகிற்கு அறிவித்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

கிறிஸ்துவைப் பின்பற்றும் உயர்ந்த அழைப்பு, ஒரு சில வேளைகளில் நம் சொந்த நலன்களில் கவனத்தைத் திருப்பும் ஒரு முயற்சியாக மாறும் ஆபத்து உள்ளது என்பதை தன் உரையில், ஓர் எச்சரிக்கையாக விடுத்த திருத்தந்தை, உயிரையும் வழங்கும் அளவுக்கு ஒருவர் வாழ்வை அர்ப்பணிப்பது, உயர்ந்ததோர் அழைப்பு என்று எடுத்துரைத்தார்.

சிறைப்பட்ட கிறிஸ்தவர்களின் விடுதலைக்கென உருவாக்கப்பட்ட இத்துறவு சபை, இன்றைய உலகில் பல்வேறு வழிகளில் சிறைப்பட்டுள்ள கிறிஸ்தவர்களை விடுவிக்க, சிறப்பான முறையில் அழைக்கப்பட்டுள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

மற்றவர்களை விடுதலை செய்வதற்கு முன்னர், இத்துறவு சபையைச் சார்ந்தவர்கள், தங்களையே, பல்வேறு பற்றுகளிலிருந்து விடுதலை செய்வதற்கு, உள்மன சுதந்திரம் பெற்றவர்களாகத் திகழ வேண்டும் என்று, திருத்தந்தை, தன் உரையில் வேண்டுகோள் விடுத்தார்.

13ம் நூற்றாண்டில் நிலவிய பல்வேறு போர்களால், கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் அடிமைகளாக விற்கப்பட்ட வேளையில், அவர்களின் விடுதலைக்கென உழைக்க, புனித பீட்டர் நொலாஸ்கோ (St Peter Nolasco) அவர்களால், 1218ம் ஆண்டு, Mercedarian துறவு சபை உருவாக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 December 2018, 15:00