தேடுதல்

மரண தண்டனைக்கு எதிராக செயலாற்றிவரும் பன்னாட்டு அமைப்பின் அதிகாரிகளுடன் திருத்தந்தை மரண தண்டனைக்கு எதிராக செயலாற்றிவரும் பன்னாட்டு அமைப்பின் அதிகாரிகளுடன் திருத்தந்தை 

மரண தண்டனைக்கு எதிராக பாடுபடுவோருக்கு வாழ்த்துக்கள்

இறைவனால் படைக்கப்பட்ட மனித உயிரை பறிப்பதற்கு எந்த மனிதருக்கும் உரிமையில்லை என்பதில், கத்தோலிக்கத் திருஅவை பெற்றுள்ள தெளிவை, உலக அரசுகளும் பெறவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மரண தண்டனைக்கு எதிராக செயலாற்றிவரும் பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த உயர் மட்ட அதிகாரிகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 17, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த வேளையில், அவர்கள் ஆற்றிவரும் பணிக்கு, தன் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தார்.

மரண தண்டனை இவ்வுலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை, தன் உரைகளில் கூறி வருவதாக, எடுத்துக்காட்டுகளுடன் கூறிய திருத்தந்தை, அண்மையில், கத்தோலிக்க மறைக்கல்வியின் 2267ம் எண் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

கடந்த நூற்றாண்டுகளில், மனித உயிருக்கு தகுந்த மதிப்பு அளிக்கப்படாத சூழலில், மனித உயிர்களைப் பறிக்கும் தண்டனைகளை, திருஅவையும் நடத்தியுள்ளது என்பதை தன் உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது, கத்தோலிக்கத் திருஅவை, மரண தண்டனை ஒழிப்பில் மிகவும் தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்று எடுத்துரைத்தார்.

இறைவனால் படைக்கப்பட்ட மனித உயிரை பறிப்பதற்கு எந்த மனிதருக்கும் உரிமையில்லை என்பதில், திருஅவை பெற்றுள்ள இந்தத் தெளிவை, உலக அரசுகள் பெறவேண்டும் என்பதை தன் உள்ளார்ந்த விருப்பமாக திருத்தந்தை தன் உரையில் வெளியிட்டார்.

உலகின் பல்வேறு நாடுகளில், மரண தண்டனையை அழிக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லையெனினும், அந்நாடுகளில், இத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாடுகள், விரைவில் தங்கள் நடைமுறைப் பழக்கத்தை சட்டமாக மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மரண தண்டனைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும், அடிப்படையில், மனித நீதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகளே என்று கூறியத் திருத்தந்தை, அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ள உறுப்பினர்களை மீண்டும் ஒருமுறை வாழ்த்தியதோடு, அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும், திருப்பீடத்தின் முழுமையான ஒத்துழைப்பு தொடரும் என்று உறுதியளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2018, 15:08