தேடுதல்

கொழும்பு துணை ஆயர் ஆன்டன் ஜெயக்கொடி அவர்கள் திருத்தந்தைக்கு வாழ்த்துச் சொல்கிறார் கொழும்பு துணை ஆயர் ஆன்டன் ஜெயக்கொடி அவர்கள் திருத்தந்தைக்கு வாழ்த்துச் சொல்கிறார் 

82வது பிறந்தநாளைக் கொண்டாடும் திருத்தந்தை பிரான்சிஸ்

தன் 82வது பிறந்தநாளையும், திருத்தந்தையாகப் பொறுப்பேற்றபின், தன் 6வது பிறந்தநாளையும் டிசம்பர் 17, இத்திங்களன்று சிறப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தன் 82வது பிறந்தநாளையும், திருத்தந்தையாகப் பொறுப்பேற்றபின், தன் 6வது பிறந்தநாளையும் டிசம்பர் 17, இத்திங்களன்று சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, உலகின் பல பகுதிகளிலிருந்தும், வாழ்த்துக்கள் வந்தடைந்தன.

1936ம் தேதி, டிசம்பர் 17ம் தேதி, அர்ஜென்டீனா நாட்டின் தலைநகர், புவனஸ் அயிரஸ் நகரில், Mario José Bergoglio, Regina María Sívori தம்பதியருக்குப் பிறந்த முதல் மகனான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்ற பெயருடன் திருமுழுக்கு பெற்றார்.

இரண்டு சகோதரர்கள், மற்றும் இரண்டு சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த ஹோர்கே அவர்கள், 1958ம் ஆண்டு, தன் 22வது வயதில் இயேசு சபையில் சேர்ந்து, 1969ம் ஆண்டு அருள்பணியாளராக அருள் பொழிவு பெற்றார்.

ஹோர்கே அவர்கள் அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்ற நாளன்று,அவரது பாட்டி அவருக்கு தந்த ஒரு கடிதத்தை, அவர் தன் கட்டளை செப நூலில் பாதுகாத்து வந்தார். துன்பங்கள் வரும்போது, நற்கருணை நாதர் முன் அமர்ந்து பெருமூச்சு விட்டு வேண்டிக்கொள்ள வேண்டும் என்று, அம்மடலில், அவரது பாட்டி எழுதியிருந்ததாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

1973ம் ஆண்டு அர்ஜென்டீனா இயேசு சபை மாநிலத்தலைவராகப் பொறுப்பேற்ற ஹோர்கே அவர்கள், 1992ம் ஆண்டு ஆயராக அருள்பொழிவு பெற்று, பின்னர், 1998ம் ஆண்டு, புவனஸ் அயிரஸ் உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்றார்.

2001ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்ட ஹோர்கே அவர்கள், 2005ம் ஆண்டு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தெரிவு செய்யப்பட்ட கர்தினால்கள் அவையில் பங்கேற்றார்.

2013ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தன் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து இடம்பெற்ற கர்தினால்கள் அவையில், கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரான்சிஸ் என்ற பெயரை தெரிவு செய்தார்.

திருஅவை வரலாற்றில், தென் அமெரிக்க கண்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தையாகவும், இப்பொறுப்பை ஏற்ற முதல் இயேசு சபை துறவியாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி முதல் தன் தலைமைப் பணியை ஆற்றிவருகிறார்.

எளிமை, கருணை, வறியோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது அக்கறை, குழந்தைகள் மீது பாசம், இயற்கை மீது ஈடுபாடு ஆகியவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப்பணியில் விளங்கும் சிறப்பு அம்சங்கள் என்பதை இவ்வுலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2018, 15:03