தேடுதல்

 திருத்தந்தையின் பிறந்தநாளுக்கு Dolceria Hedera அமைப்பு தயாரித்த கேக் திருத்தந்தையின் பிறந்தநாளுக்கு Dolceria Hedera அமைப்பு தயாரித்த கேக் 

திருத்தந்தையை வாழ்த்திய இத்தாலிய அரசுத்தலைவரும், ஆயர்களும்

தன் 82வது பிறந்தநாளைக் கொண்டாடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு இத்தாலிய ஆயர்களும், இத்தாலிய அரசுத்தலைவரும் தங்கள் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

‘தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்’ திருப்பலியில் நற்செய்தியாக வாசிக்கப்பட்ட நாளன்று பிறந்த திருத்தந்தையே, உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் என்று, இத்தாலிய ஆயர் பேரவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளது.

டிசம்பர் 17, இத்திங்களன்று தன் 82வது பிறந்தநாளைக் கொண்டாடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு இத்தாலிய ஆயர்களும், இத்தாலிய அரசுத்தலைவரும் தங்கள் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளனர்.

ஒவ்வொரு குழுவையும், தனிப்பட்டவரையும் சந்திக்கும் வேளையில், எனக்காக செபிக்க மறவாதீர்கள் என்று விண்ணப்பிக்கும் திருத்தந்தைக்கு, கத்தோலிக்கத் திருஅவையைச் சார்ந்த அனைவரும், இன்று, தங்கள் செபங்களை சிறப்பாக எழுப்பியுள்ளனர் என்று, இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் குவால்தியேரோ பஸ்ஸெத்தி அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா அவர்கள், திருத்தந்தையின் பிறந்தநாளுக்கென அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், தனது தனிப்பட்ட, மற்றும் இத்தாலிய மக்கள் அனைவரின் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

தன் அறிவுத்திறனிலும், ஒரு மேய்ப்பராக மக்கள் மீது கொண்டிருந்த அக்கறையிலும் சிறந்து விளங்கிய திருத்தந்தை 6ம் பவுல் அவர்களை, இவ்வாண்டு ஒரு புனிதராக உயர்த்தியதன் வழியே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய மக்கள் மீது கொண்டுள்ள அக்கறை வெளியாகிறது என்று, இத்தாலிய அரசுத்தலைவர் மத்தரெல்லா அவர்கள் தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீதியை நிலைநாட்டும் பணியில் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளையும் துணிவுடன் சந்திக்க இத்தாலிய மக்களிடமும், உலக மக்களிடமும் திருத்தந்தை விண்ணப்பித்து வருவதற்கு, இத்தாலிய அரசுத்தலைவர் தன் சிறப்பான நன்றியை, இவ்வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

மேலும், கேக் மற்றும் ஏனைய உணவுப்பொருள்களைத் தயாரிக்கும் தோல்செரியா ஹெதேரா (Dolceria Hedera) என்ற நிறுவனம், திருத்தந்தையின் பிறந்தநாளையொட்டி சிறப்பான கேக் ஒன்றை தயாரித்துள்ளது.

இளையோரை மையப்படுத்தி, இவ்வாண்டு நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தையும், அடுத்த ஆண்டு சனவரி மாதம் பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் இளையோர் உலக நாளையும் இணைக்கும் வகையில், இளையோர் மற்றும் குழந்தைகள் நடுவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உருவத்தைப் பொறித்து, அவரது பிறந்தநாள் கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2018, 14:50