பல்கேரியா, மற்றும் மாசிடோனியாவில் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணங்களின் இலச்சினைகள் பல்கேரியா, மற்றும் மாசிடோனியாவில் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணங்களின் இலச்சினைகள் 

பல்கேரியா, மற்றும் மாசிடோனியாவில் திருத்தந்தையின் பயணம்

2019ம் ஆண்டு, மே மாதம், 5ம் தேதி முதல் 7ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்கேரியா, மற்றும் மாசிடோனியா நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்கேரியா, மற்றும் மாசிடோனியா நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று திருப்பீடம் இவ்வியாழனன்று அறிவித்தது.

இவ்விரு நாடுகளின் தலைவர்கள், மற்றும் தலத்திருஅவை அதிகாரிகள் வழங்கிய அழைப்பை ஏற்று இந்நாடுகளுக்குச் செல்லும் திருத்தந்தை, பல்கேரியாவில், சோபியா (Sofia) மற்றும் ராக்கொவ்ஸ்கி (Rakovski) ஆகிய நகரங்களிலும், மாசிடோனியாவில், புனித அன்னை தெரேசாவின் பிறந்த ஊரான ஸ்கோப்யேவிலும் (Skopje) பயணங்களை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கேரியா நாட்டின் திருத்தூதுப் பயணத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இலச்சினையில், இவ்வுலகை இரு கரங்கள் தாங்கியிருப்பது போலவும், 'Pacem in Terris', அதாவது, 'உலகில் அமைதி' என்ற சொற்களும் பொறிக்கப்பட்டுள்ளன. 'Pacem in Terris' என்ற திருமடலை எழுதிய திருத்தந்தை, புனித 23ம் ஜான் அவர்கள், பல்கேரியா நாட்டில் திருப்பீடத்தின் தூதராகப் பணியாற்றினார் என்பதைக் குறிக்கவும், உலகில், குறிப்பாக, பல்கேரியாவில் அமைதி தேவை என்பதைக் குறிக்கவும், இச்சொற்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மாசிடோனியா நாட்டின் திருத்தூதுப் பயணத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இலச்சினையில், அந்நாட்டுக் கொடியும், திருத்தந்தையின் உருவமும் பதிக்கப்பட்டுள்ளன. "சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்" (லூக்கா 12:32) என்ற சொற்கள் இத்திருத்தூதுப் பயணத்தின் விருது வாக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இப்பயணங்களைக் குறித்த முழு விவரங்கள் பின்னர் வழங்கப்படும் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கிரேக் புர்கே அவர்கள் அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2018, 15:35