அமல அன்னை மரியா அமல அன்னை மரியா 

‘இதோ, நான் இருக்கின்றேன்’ என்பது மாபெரும் புகழ்ச்சியாகும்

‘இதோ நான் இருக்கின்றேன்’ என மரியாவோடு சொல்லும்போது நாம் இறைவனைப் புகழ்கின்றோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

அமல அன்னையைப் போன்று, நம் பிரச்சனைகளில் இறைவனில் முழுநம்பிக்கை வைத்து வாழ வேண்டுமென்று, அமல அன்னை விழாவான, டிசம்பர் 8 இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இச்சனிக்கிழமை நண்பகலில், வத்திக்கான் தூய பேது வளாகத்தில், மூவேளை செப உரையைக் கேட்டு ஆசிர்பெறக் கூடியிருந்த ஏறத்தாழ முப்பதாயிரம் விசுவாசிகளுக்கு, இவ்விழா திருப்பலியின் வாசகங்களை மையப்படுத்தி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இறைவன், தன்னை அழைத்தபோது, ‘நான் ஒளிந்துகொண்டேன்’ என்று ஆதாம் சொன்னார், அதற்கு எதிர்மாறாக, மரியா, இயேசு பிறப்பு அறிவிக்கப்பட நிகழ்வில், ‘இதோ நான் இருக்கின்றேன்’ என்று சொன்னார் என்றார்.

இவ்விரு மாறுபட்ட பதில்களைக் குறிப்பிட்ட திருத்தந்தை, அன்னை மரியா உரைத்த, இதோ நான் இருக்கிறேன் என்பது, வாழ்வுக்கு முக்கியமான வார்த்தை என்றும், இது, தன்னலத்தை மையப்படுத்தாமல், கடவுளைச் சார்ந்து வாழவும், திருப்தியற்ற வாழ்வுக்கு அருமருந்தாகவும், உள்ளத்தில் எப்போதும் இளமையாக இருக்கவும் உதவுகின்றது என்றும் உரைத்தார்.

இறைவனில் நம் வாழ்வைப் பணயம் வைத்து, ‘இதோ நான் இருக்கின்றேன்’ எனச் சொல்வது, நாம் அவருக்குச் செலுத்தும் மிகப்பெரும் புகழ்ச்சியாகும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

‘நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என மரியா உரைத்தபோது, மரியா தனது விருப்பம்போலன்றி, உமது விருப்பம்போல் நடக்கட்டும் எனக் காட்டுகின்றார் என்றுரைத்த திருத்தந்தை, மரியாவின் இறைநம்பிக்கை, நம்மில் பலரின் கடவுள் பற்றிய சிந்தனையைவிட மாறுபட்டது என்றும், கடவுள்மீது அவநம்பிக்கை ஏற்படுத்தும் சாத்தானின் சோதனையை, இதோ நான் இருக்கின்றேன் என்ற சொற்களால் மரியா வென்றார் என்றும் கூறினார்.

மரியா இவ்வாறு கூறியதால், அவரது வாழ்வு எளிதாக இல்லை, இறைவனோடு ஒன்றித்திருப்பதால் நம் பிரச்சனைகள் மாயவித்தைபோல் தீர்க்கப்பட்டுவிடும் என்பதும் இல்லை என்றார், திருத்தந்தை. வானதூதர் மரியாவைவிட்டு அகன்றதும், மரியா பிரச்சனைகளைத் தனியாகவே சந்தித்தார் எனவும், ஆயினும், கடவுள் எப்பொழுதும் தன்னோடு இருக்கின்றார் என்பதில் உறுதியாய் இருந்தார் எனவும் திருத்தந்தை கூறினார்.

இதோ இருக்கிறேன் ஆண்டவரே, உம் விருப்பம் என்னில் நிறைவேறட்டும் என்றுரைத்த அமல அன்னை போன்று, ஒவ்வொரு நாளும் நாம் வாழ்வதற்கும், நம் பிரச்சனைகளில் ஆண்டவரிடம் தஞ்சம் புகவும், அருள் வேண்டுவோம் என்று, மூவேளை செப உரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னை மரியா ஜென்மப் பாவமின்றி பிறந்தார் என்பதை, திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், 1854ம் ஆண்டு டிசம்பர் 8ம் நாளன்று, விசுவாச சத்தியமாக அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2018, 15:11