சிரியா சிறாரின் நினைவாக மெழுகுதிரி ஏற்றுகிறார் திருத்தந்தை சிரியா சிறாரின் நினைவாக மெழுகுதிரி ஏற்றுகிறார் திருத்தந்தை 

போரிடுவோர் மனங்களில் மாற்றங்கள் நிகழ செபிப்போம்

சிரியா நாட்டு குழந்தைகளுக்கு நம்பிக்கையை வழங்கும் அடையாளமாக மெழுகுதிரியை ஏற்றி வைத்து செபித்த திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிரியா நாட்டின் குழந்தைகளுக்கு நம்பிக்கை வழங்கும் அடையாளமாக, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின், மெழுகுதிரி ஒன்றை ஏற்றிவைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எட்டு ஆண்டுகளாக சிரியா நாட்டை துன்பத்திற்குள்ளாக்கிவரும் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், அந்நாட்டு குழந்தைகளில் வருங்காலம் குறித்த நம்பிக்கையை வளர்க்கவும், துன்புறும் திருஅவைகளுக்கு உதவும் கத்தோலிக்க அமைப்பான, Aid to the Church in Need என்ற அமைப்பு, திருவருகைக் காலத்தின் துவக்கத்தில், மெழுகுதிரிகளை ஏற்றும் நிகழ்ச்சியை துவக்கியுள்ள முயற்சியில் பங்குகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின், பெரிய மெழுகுதிரி ஒன்றை ஏற்றி வைத்து, அருள்நிறை மரியே என்ற செபத்தை விசுவாசிகளுடன் இணைந்து செபித்தார்.

சிரியாவிலும், மத்தியக் கிழக்குப் பகுதியிலும் வாழும் கிறிஸ்தவர்கள், இரக்கம், மன்னிப்பு மற்றும் ஒப்புரவின் சாட்சிகளாக இருக்கவேண்டும் என நாம் செபிப்பதுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்வோம், என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை, உலகின் ஏனைய பகுதிகளில், மோதல்களால் துன்புறும் மக்களும், இறைவனின் அருகாமையை உணரவும், அமைதிக்காக உழைக்கும் தங்கள் அர்ப்பணத்தை வெளியிடவும், நம்பிக்கையைக் குறிக்கும் இந்த மெழுகுதிரியின் ஒளி உதவுவதாக என கூறினார்.

போர் புரிவோரையும் ஆயுதங்கள் தயாரிப்போரையும் இறைவன் மன்னிப்பாராக, அவர்கள் இதயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவாராக, என புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து, செபிக்கவும் செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2018, 16:16