புதிய தூதர்களின் நற்சான்றிதழ்களைப் பெறும் நிகழ்வு புதிய தூதர்களின் நற்சான்றிதழ்களைப் பெறும் நிகழ்வு 

புதிய பன்னாட்டுத் தூதர்களுக்கு திருத்தந்தையின் உரை

மோதல்களும், போர்களும் அல்ல, மாறாக, உரையாடல்களே நம் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டும் என்ற பாடத்தை, இன்றைய உலகத் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மோதல்களும், போர்களும் அல்ல, மாறாக, உரையாடல்களே நம் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டும் என்று, 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரு உலகப்போர்களின் வழியே நாம் கற்றுக்கொண்ட பாடங்கள், இன்றைய உலகத் தலைவர்களுக்கும் நமக்கும் தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டுத் தூதர்களிடம் கூறினார்.

சுவிட்சர்லாந்து, மால்ட்டா, பஹாமாஸ், கேப் வெர்தே, எஸ்டோனியா, ஐஸ்லாந்து, துர்க்மெனிஸ்தான், கிரனாடா, கட்டார், மற்றும் காம்பியா ஆகிய நாடுகளின் தூதர்களாக, திருப்பீடத்தில் பணியாற்ற வந்திருப்போர், டிசம்பர் 13, இவ்வியாழன் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, தங்கள் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்தனர்.

புதிய பத்து தூதர்களின் நற்சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட திருத்தந்தை, அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்கள் வழியே, அந்த நாட்டு தலைவர்கள் மற்றும் மக்களுக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவர்களுக்கு ஒரு குறுகிய உரையை வழங்கினார்.

முதல் உலகப்போர் முடிவுற்றதன் முதல் நூற்றாண்டையும், மனித உரிமைகளின் அனைத்துலக அறிக்கை வெளியிடப்பட்டதன் 70ம் ஆண்டு நிறைவையும் இவ்வாண்டு சிறப்பிக்கின்றோம் என்பதை, தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்களும், மோதல்களும் தொடர்வது குறித்தும், மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்படுவது குறித்தும் தன் கவலையை வெளியிட்டார்.

ஒவ்வொரு மனிதரும், பிறப்பிலேயே பெறுகிற அடிப்படை மனித மாண்பும், சமமான உரிமைகளும், உலக அரசுகளுக்கிடையே நிலவவேண்டிய உறவுகளுக்கு அடித்தளமாக அமைவதை, நாட்டுத் தூதர்கள் உறுதி செய்யவேண்டும் என்பதை, திருத்தந்தை, தன் உரையில் வேண்டுகோளாக முன்வைத்தார்.

இன்றைய உலகில் நிலவும் புலம்பெயர்ந்தோர் பிரச்சனையைக் குறித்து பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பிரச்சனைக்கு, அனைத்து நாடுகளும் இணைந்து பொறுப்பான வழியில் தீர்வு காணவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

தங்கள் பணிகளைத் துவங்கும் அனைத்து தூதர்களுக்கும் திருப்பீடம் தகுந்த ஆதரவு அளிக்கும் என்று தன் உரையின் இறுதியில் வாக்களித்த திருத்தந்தை, புதிய தூதர்கள் அனைவருக்கும் இறைவனின் மகிழ்வும், அமைதியும் கிடைக்கும்படி தான் வேண்டிக்கொள்வதாகக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2018, 15:33