Scholas Occurrentes  இளையோர் மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய காணொளிச் செய்தி Scholas Occurrentes இளையோர் மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய காணொளிச் செய்தி 

தனித்துவமான அடையாளங்களை விற்பனை செய்யக்கூடாது - திருத்தந்தை

இளையோர் ஒவ்வொருவரும் நான் யார் என்ற கேள்வியை, தனக்குள், அடுத்தவருக்கு முன், கடவுளுக்கு முன், வரலாற்றுக்கு முன் எழுப்பி, தெளிவான விடைகள் தேடினால், வாழ்வின் பொருளை கண்டடைய முடியும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இளையோர் ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட அடையாளங்களை பாதுகாத்து, அதே வேளையில் அடுத்தவரின் வேறுபட்ட அடையாளங்களை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அவர்களைச் சந்திப்பது, சவாலான ஒரு விடயம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோருக்கு அனுப்பிய ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

அக்டோபர் 29, கடந்த திங்கள் முதல், நவம்பர் 1, இவ்வியாழன் முடிய, ஆர்ஜென்டீனா நாட்டின் தலைநகர் புவனஸ் அயிரஸ் நகரில், Scholas Occurrentes மற்றும் World Ort என்ற இரு அமைப்பினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மூன்றாவது இளையோர் மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியிருந்தார்.

நான் யார் என்ற கேள்வியை, இளையோர் ஒவ்வொருவரும் எழுப்பவேண்டும் என்று தன் காணொளிச் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, இந்தக் கேள்வியை, தனக்குள், அடுத்தவருக்கு முன், கடவுளுக்கு முன், வரலாற்றுக்கு முன் எழுப்பி, தெளிவான விடைகள் தேடினால், வாழ்வின் பொருளை கண்டடைய முடியும் என்று கூறியுள்ளார்.

நாம் ஒவ்வொருவரும் பெற்றுள்ள தனித்துவமான அடையாளம், தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட ஓர் எண்ணிக்கையோ, குறியீடோ அல்ல என்றும், நமது அடையாளங்கள், ஒரு குடும்பத்தில் ஒரு சமுதாயத்தில், ஒரு நாட்டில் உருவாக்கப்படுகின்றன என்றும் திருத்தந்தை இச்செய்தியில் வலியுறுத்திக் கூறினார்.

இந்த அடிப்படை உண்மைகளை மறக்கும்போது, அடுத்தவரைக் குறித்த அச்சங்கள் நமக்குள் எழுகின்றன என்றும், இதனால், வன்முறைகள் பெருகி, சிறிதும், பெரிதுமாக, உலகெங்கும் போர்கள் உருவாகியுள்ளன என்றும், திருத்தந்தை, தன் செய்தியில், கவலையுடன் எடுத்துரைத்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் பிறப்பில் உருவாகும் தனித்துவமான அடையாளங்களை, எக்காரணம் கொண்டும், விற்பனை செய்யக்கூடாது என்ற வேண்டுகோளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காணொளிச் செய்தியில், ஒரு விண்ணப்பமாக வெளியிட்டார்.

நவம்பர் 1ம் தேதி நிறைவுற்ற இந்தக் கூட்டத்தில், 30 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் அதிகமான இளையோர் பங்கேற்றனர் என்று, Scholas Occurrentes அமைப்பைச் சார்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2018, 14:41