தேடுதல்

இளையோர் நாள் சிலுவையை ஏந்திச் செல்லும் பானமா இளையோர் இளையோர் நாள் சிலுவையை ஏந்திச் செல்லும் பானமா இளையோர் 

34வது உலக இளையோர் நாள் – திருத்தந்தையின் காணொளிச் செய்தி

இறைவனின் அழைத்தல், இளையோரின் கனவுகளை அழித்துவிடாமல், அவற்றை மென்மேலும் ஒளிரச் செய்கின்றது - உலக இளையோர் நாள் செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத நம்பிக்கை உள்ளவர்களாயினும், மத நம்பிக்கை அற்றவர்களாயினும், இளையோர், தங்கள் கல்வி ஆண்டுகளை முடிக்கும் வேளையில், துன்புறும் மனிதருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதல் அவர்களிடம் உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோருக்கு அனுப்பியுள்ள ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

பானமா நாட்டில், வரும் சனவரி மாதம் நடைபெறவிருக்கும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கென, திருத்தந்தை அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில், பிறருக்கு உதவி செய்யும் பண்பு, இளையோரிடம் காணப்படும் சக்தி என்று கூறியுள்ளார்.

உலக இளையோர் நாள் நிகழ்ச்சிகளின் மையக்கருத்தாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்ற சொற்களை இச்செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளம்பெண் மரியா, துணிவுடன் கூறிய 'ஆம்' என்ற பதிலுரை, பல்லாயிரம் இளையோருக்கு உந்து சக்தியாக அமைந்து வருகிறது என்று கூறினார்.

அயலவருக்கு பணிகள் ஆற்றுவது, வெறும் செயல்பாடுகளால் மட்டும் நிறைவதில்லை, மாறாக, அது, இறைவனின் அழைத்தலுக்குச் செவிமடுப்பதிலும் அடங்கியுள்ளது என்று தன் காணொளிச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, நம் உள்ளங்களில் உருவாகும் அமைதியில், இறைவனின் அழைத்தலுக்குச் செவிமடுக்கும்போது, நமது சுய அடையாளத்தையும் நாம் கண்டுகொள்ளமுடியும் என்று கூறினார்.

இல்லறம், துறவறம், அருள்பணித்துவம் என்ற அனைத்து நிலைகளுமே, இறைவனின் அழைத்தல் என்பதை தன் செய்தியில் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வழைத்தல், இளையோரின் கனவுகளை அழித்துவிடாமல், அவற்றை மென்மேலும் ஒளிரச் செய்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

வரவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் ஆர்வமாகப் பங்கேற்க இளையோரை ஊக்குவிக்கும் இச்செய்தியின் இறுதியில், பானமா நாட்டிற்கு இளையோர் மேற்கொள்ளும் பயணம் நன்முறையில் அமையவேண்டும் என்ற வேண்டுதலோடும், இளையோரைச் சந்திக்க தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இளையோரை மையப்படுத்தி அண்மையில் வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில், திருஅவைத் தலைவர்கள், ஊடகங்களை இன்னும் கூடுதலாகப் பயன்படுத்தவேண்டும் என்று எழுந்த ஒரு பரிந்துரையின் எதிரொலியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் முறையாக, உலக இளையோர் நாள் நிகழ்வுச் செய்தியை காணொளி வடிவில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019ம் ஆண்டு சனவரி 22ம் தேதி முதல், 27ம் தேதி முடிய நடைபெறும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் இறுதி மூன்று நாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்கிறார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2018, 14:48