தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

சிரியாவில் பணியாற்றுவோருக்கு திருத்தந்தையின் மடல்

சிரியாவில் சிந்தப்பட்டுள்ள மறைசாட்சியினரின் இரத்தம், இறைவனின் அரசை வளர்க்கிறது; அதுவே, வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டுகிறது - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு மிகுந்த சிரியாவில் வாழும் கிறிஸ்தவர்களில், துன்புறும் இயேசுவைக் காண்கிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியாவில் பணியாற்றும் பிரான்சிஸ்கன் துறவு சபை உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு மடலில் கூறியுள்ளார்.

சிரியாவில் பணியாற்றிவரும் பிரான்சிஸ்கன் துறவு சபையினருக்கு பொறுப்பாளர்களாக இருக்கும் அருள்பணியாளர்கள் Hanna Jallouf மற்றும் Louai Bsharat ஆகிய இருவரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பியிருந்த மடலுக்கு, தன் பதிலை வழங்கிய திருத்தந்தை, வறுமையிலும், தன் சொந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்டும் வாழ்ந்த இயேசுவின் துன்பங்களில், சிரியாவில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களும் ஒன்றித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

மறைசாட்சியினரின் இரத்தம் இறைவனின் அரசை வளர்க்கிறது என்பதையும், அதுவே, வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டுகிறது என்பதையும் திருத்தந்தை தன் மடலில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

"கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?" என்று திருத்தூதர் பவுல், உரோமையருக்கு எழுதியுள்ள சொற்களை, திருத்தந்தை இம்மடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் தான் நிறைவேற்றும் திருப்பலியில், சிரியா நாட்டில் துன்புறுவோருக்காக செபித்து வருவதாக கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலுவையடியில் தன் மகனின் பாடுகளோடு தன்னை இணைத்துக் கொண்ட அன்னை மரியாவின் பரிந்துரையை அனைவரும் நாடுவோம் என்று, இம்மடலை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2018, 14:14