தேடுதல்

திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் 

34வது உலக இளையோர் நாள் – திருத்தந்தையின் பயண விவரம்

34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பானமாவில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தின் விவரங்களை, திருப்பீடம் வெளியிட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வரும் சனவரி மாதம் பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் நோக்கத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தின் விவரங்களை, திருப்பீடம் வெளியிட்டுள்ளது.

சனவரி 23, புதன் கிழமை காலை, உரோம் நேரம் 9.30 மணிக்கு Fiumicino பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏறத்தாழ 13 மணி நேரங்கள் பயணம் செய்து, அன்று மாலை, பானமா உள்ளூர் நேரம் 4.30 மணியளவில் அந்நாட்டின் Tocumen பன்னாட்டு விமான நிலையத்தை அடைவார்.

சனவரி 24, வியாழனன்று காலையில், அரசுத் தலைவர், அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதர்கள் ஆகியோரையும், மத்திய அமெரிக்க நாடுகளின் ஆயர்களையும் சந்தித்தபின், மாலை 5.30 மணிக்கு, இளையோர் உலக நாள் நிகழ்வுகளை அதிகாரப்பூர்வமாகத் துவங்கி வைப்பார் திருத்தந்தை.

சனவரி 25, வெள்ளியன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சிலுவைப்பாதை பக்தி முயற்சியும், 26, சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் திருவிழிப்பு வழிபாடும், 27 ஞாயிறு காலை 8.00 மணிக்கு நடைபெறும் உலக இளையோர் நாள் இறுதி திருப்பலியும், திருத்தந்தையின் பயணத் திட்டங்களில் முக்கியமான நிகழ்வுகளாகும்.

சனவரி 27, ஞாயிறு, மாலை, 6.15 மணிக்கு பானமா நாட்டிலிருந்து விடைபெற்று புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 28, திங்கள் காலை உரோம் நகர் உள்ளூர் நேரம், நண்பகல் 12 மணியளவில், Ciampino விமான நிலையத்திற்கு வந்து சேருவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2018, 15:00