111118 - திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரைக்கு செவி மடுக்கும் திருப்பயணிகள் 111118 - திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரைக்கு செவி மடுக்கும் திருப்பயணிகள் 

இவ்வுலகில் நிலவிவரும் போர் கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும்

முதல் உலகப்போரை, 'அர்த்தமற்ற படுகொலை' என்று, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் குறிப்பிட்டதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நினைவு கூர்ந்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 11, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில், புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களிடம், மூன்று கருத்துக்களை, தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொண்டார்.

1918ம் ஆண்டு, நவம்பர் 11ம் தேதி, முதல் உலகப்போர் முடிவுக்கு வந்ததையடுத்து, அதன் முதல் நூறாம் ஆண்டு நினைவு கடைபிடிக்கப்படுவதை, தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் உலகப்போரை, 'அர்த்தமற்ற படுகொலை' என்று, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் குறிப்பிட்டதை,  நினைவு கூர்ந்தார்.

முதல் உலகப்போர் முடிவுக்கு வந்ததை நினைவுகூரும் விதமாக, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயம் உட்பட, இத்தாலியின் அனைத்து ஆலயங்களிலும் இஞ்ஞாயிறு பிற்பகல் 1.30 மணிக்கு, ஆலய மணிகள் அடிக்கப்படும் என்பதை நினைவுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகில் இன்றும் நிலவி வரும் போர் கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் என்று, அனைவரும் செபிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, நவம்பர் 10, இச்சனிக்கிழமை, ஸ்பெயின் நாட்டின் பார்சலோனாவில் இறை ஊழியர் தியோதோரோ இயேரா (Teodoro Illera) மற்றும் 15 மறைசாட்சிகள் அருளாளர்களாக உயர்த்தப்பட்டனர் என்பதைக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த 16 பேரில், 13 பேர் இருபால் துறவியர் என்றும், மூவர் பொதுநிலையினர் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், நவம்பர் 18, வருகிற ஞாயிறன்று, வறியோரின் இரண்டாவது உலக நாள் சிறப்பிக்கப்படும் என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த நாளையொட்டி, புனித பேதுரு வளாகத்தில், இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2018, 13:13