திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இன்ஸ்டகிராம் பக்கங்களில் ஒன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இன்ஸ்டகிராம் பக்கங்களில் ஒன்று 

இறைவன் என்ற நண்பரின் வீட்டுக்கதவைத் தட்டுவதே செபம்

"செபிப்பதன் பொருள் என்னவெனில், நண்பர் ஒருவரின் வீட்டுக்கதவைத் தட்டுவதாகும். இறைவனே நம் நண்பர்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

லூக்கா நற்செய்தியில் (பிரிவு 11) தன் நண்பரின் உதவியைத் தேடி நள்ளிரவில் சென்றவரைக் குறித்து இயேசு கூறிய உவமையை நினைவுறுத்தும் வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தி அமைந்திருந்தது.

"செபிப்பதன் பொருள் என்னவெனில், நண்பர் ஒருவரின் வீட்டுக்கதவைத் தட்டுவதாகும். இறைவனே நம் நண்பர்" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டார்.

ஏறத்தாழ ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

நவம்பர் 7, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1.750 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 79 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் இன்ஸ்டகிராம் முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, அவ்வப்போது வெளியிடப்பட்டு வரும் படங்கள் மற்றும் காணொளிகள், இதுவரை 615 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 57 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2018, 15:36