தேடுதல்

புனித பூமியில் கர்தினால் சாந்த்ரி புனித பூமியில் கர்தினால் சாந்த்ரி 

கர்தினால் சாந்த்ரி மேற்கொண்டுள்ள புனித பூமி பயணம்

"தாராள மனம் கொண்டிருக்கும் வரத்திற்காக ஆண்டவரிடம் மன்றாடுவோம்; அதன் வழியாக, நம் உள்ளங்கள் இன்னும் திறந்த மனமும், அன்பும் கொண்டு விளங்கட்டும்"

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தாராள மனதை மையப்படுத்தி தான் வழங்கிய மறையுரையைத் தொடர்ந்து, அதே எண்ணத்தை வெளிப்படுத்தும் டுவிட்டர் செய்தியொன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 26, இத்திங்களன்று வெளியிட்டார்.

"தாராள மனம் கொண்டிருக்கும் வரத்திற்காக ஆண்டவரிடம் மன்றாடுவோம்; அதன் வழியாக, நம் உள்ளங்கள் இன்னும் திறந்த மனமும், அன்பும் கொண்டு விளங்கட்டும்" என்று சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள், நவம்பர் 26 இத்திங்கள் முதல், 28 இப்புதன் முடிய, புனித பூமியில் மேய்ப்புப்பணி பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று, இப்பேராயம் அறிவித்துள்ளது.

புனித பூமியில் பணியாற்றும் அனைவரையும், குறிப்பாக, அங்கு பணியாற்றும் இலத்தீன், மற்றும் கீழை வழிபாட்டு முறை அருள்பணியாளர்களை ஊக்குவிக்கவும், புனித பூமிக்கு இன்னும் அதிகமாக திருப்பயணிகள் வருவதை ஊக்குவிப்பது குறித்த ஆலோசனைகளில் ஈடுபடவும் கர்தினால் சாந்த்ரி அவர்கள் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்தினால் சாந்த்ரி அவர்களின் மேய்ப்புப்பணி பயணம், நவம்பர் 26, இத்திங்கள் காலை 6 மணிக்கு, புனித கல்லறையில் நடைபெற்ற திருப்பலியுடன் துவங்கியது என்றும், இதைத் தொடர்ந்து, அவர், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, மூன்றாம் தியோபிலஸ் அவர்களைக் சந்தித்தார் என்றும், கீழை வழிபாட்டு முறை பேராயம் அறிவித்துள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 November 2018, 15:11