தேடுதல்

கல்லறைத் தோட்டத்தில் திருத்தந்தை கல்லறைத் தோட்டத்தில் திருத்தந்தை 

புனிதரோடு நம் உறவை வலுவுள்ளதாக ஆக்குவோம் - திருத்தந்தை

பிறக்கும் முன்னரே இறந்துபோகும் குழந்தைகளுக்கென 'வானதூதரின் தோட்டம்' என்ற பெயருடன் இலவுரன்தீனோ கல்லறையில், உருவாக்கப்பட்டுள்ள ஒரு பகுதிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 2ம் தேதி செல்கிறார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 1, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட புனிதர் அனைவரின் திருநாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"இன்று நாம் புனிதத்தின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இறைவனின் திருமுன் ஏற்கனவே பிரசன்னமாகியிருக்கும் புனிதர் அனைவரோடும் நம் அன்பையும் உறவையும் வலுவுள்ளதாக ஆக்குவோம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக பதிவாகியிருந்தன.

மேலும், இத்திருநாளையொட்டி, நண்பகல் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை, இவ்வுரையின் இறுதியில், தான் நவம்பர் 2ம் தேதி, வெள்ளியன்று, இலவுரன்தீனோவில் அமைந்துள்ள கல்லறைக்குச் சென்று, இறந்தோர் அனைவருக்காகவும் மன்றாடவிருப்பதாகவும், அனைவரும் தன்னுடன் செபத்தில் இணையுமாறும், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த அனைவரிடமும் கூறினார்.

பிறக்கும் முன்னரே இறந்துபோகும் குழந்தைகளுக்கென இலவுரன்தீனோ கல்லறையில், 'வானதூதரின் தோட்டம்' என்ற பெயருடன் ஆறு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பகுதிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் முறையாகச் செல்கிறார் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 1, அனைத்துப் புனிதரின் திருநாளன்று தொன் போஸ்கொ அறக்கட்டளை நடத்தும் மாரத்தான் ஓட்டத்தில் இவ்வாண்டு கலந்துகொண்ட அனைவரையும், திருத்தந்தை, மூவேளை செப உரையின் இறுதியில் வாழ்த்தினார்.

இதற்கிடையே, புனித திருத்தந்தை 23ம் யோவான் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள குழுமங்கள், நவம்பர் 1, இவ்வியாழனன்று, Savigliano, Fossano, Cuneo, Rimini உட்பட, இத்தாலியின் எட்டு ஊர்களில் அமைந்துள்ள கல்லறைகளுக்குச் சென்று, பிறப்பதற்கு முன்னரே இறந்துபோன குழந்தைகளுக்காக செபித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2018, 14:30