திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

'விழுக்காடு அளவுள்ள அன்பை' இயேசு விரும்புவதில்லை

இருபது, ஐம்பது, அல்லது, அறுபது விழுக்காடு என்ற அளவில் இயேசுவை நாம் அன்புகூர இயலாது – திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"'விழுக்காடு அளவுள்ள அன்பை' இயேசு விரும்புவதில்லை. இருபது, ஐம்பது, அல்லது, அறுபது விழுக்காடு என்ற அளவில் அவரை நாம் அன்புகூர இயலாது. அவரிடம் செலுத்தும் அன்பு, ஒன்று அனைத்துமாக இருக்கும், அல்லது, ஒன்றுமில்லாததாக இருக்கும்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியாக இப்புதனன்று வெளியிட்டார்.

மேலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள இராட்ஸிங்கர் (Ratzinger) அறக்கட்டளையின் விருதுகள், நவம்பர் 17, இச்சனிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வழங்கப்படும் என்று இவ்வறக்கட்டளை அறிவித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் இவ்விருதுகளுக்கு, இவ்வாண்டு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த Marianne Schlosser என்ற இறையியலாளரும், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த Mario Botta என்ற கட்டடக்கலை நிபுணரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

58 வயதான Marianne Schlosser அவர்கள், வியென்னா கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில், ஆன்மீகத்தின் இறையியல் என்ற துறையில் பேராசிரியாராகப் பணியாற்றி வருகிறார்.

75 வயதான Mario Botta அவர்கள், ஆலயங்கள், பள்ளிகள், நூலகங்கள் என்று பல்வேறு கட்டடங்களை உருவாக்கியதோடு, கட்டடக்கலை குறித்த பல்வேறு பன்னாட்டு அரங்குகளில் பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 November 2018, 14:59