“Sardegna Solidale” தன்னார்வத் தொண்டர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் “Sardegna Solidale” தன்னார்வத் தொண்டர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

சர்தேஞ்ஞா தன்னார்வலர்களுக்கு திருத்தந்தை பாராட்டு

சர்தேஞ்ஞாவில், நலிவடைந்த மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகின் ஏழை நாடுகளில் துன்புறும் மக்கள் மீதும் அக்கறை காட்டிவரும் Sardegna Solidale அமைப்புக்கு திருத்தந்தை நன்றி

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் சர்தேஞ்ஞா தீவில் தொண்டாற்றும் ஏறத்தாழ எழுநூறு தன்னார்வலர்களை, இவ்வெள்ளி காலையில், வத்திக்கானில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“Sardegna Solidale” என்ற அமைப்பில் பணியாற்றும் தன்னார்வலர்கள், ஒருமைப்பாட்டுணர்வை பரப்பும் நோக்கத்தில், புரிந்துகொள்தல் மற்றும் ஒற்றுமை உணர்வில் ஆற்றும் பணிகளைத் தொடருமாறும், அவ்வாறு ஆற்றுகையில், அப்பகுதியின் நகராட்சிகள் மற்றும் பங்குத்தளங்களுடன் இணைந்து செயல்படுமாறும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

ஒருமைப்பாடு மற்றும் எதிர்பாராத பண்புகள் கொண்ட கலாச்சாரம், தன்னார்வலர்களைத் தனியாகப் பிரித்துக் காட்டி, உடன்பிறப்பு உணர்வு கொண்ட சமுதாயத்தை அமைப்பதற்கு உதவுகின்றது என்றும், திருத்தந்தை கூறினார்.

ஒருமைப்பாட்டுணர்வில் ஆற்றப்படும் தன்னார்வப் பணிகள், பிறரின் தேவைகளுக்குச் சுதந்திரமாகவும், திறந்த மனதுடனும் செயல்பட வைக்கின்றன என்றும், நீதி, மனித வாழ்வு, படைப்பைப் பாதுகாத்தல் போன்றவற்றுக்கும், நோயாளர் மற்றும், ஞானத்தின் கருவூலங்களாகிய, வயது முதிர்ந்தோர் மீது அக்கறை காட்டவும் உதவுகின்றன என்றும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.    

சர்தேஞ்ஞா தீவின் வளமையான இயற்கை அழகையும், அதன் வரலாறு மற்றும் கலைகளைப் பாராட்டியத் திருத்தந்தை, அத்தீவின் மக்கள் எல்லாருக்கும் தன் ஆசிரையும் அளித்தார்.

“Sardegna Solidale” அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் இருபதாம் ஆண்டையொட்டி, அந்த அமைப்பினர், இவ்வெள்ளியன்று திருத்தந்தையை சந்தித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2018, 15:33