தேடுதல்

இறைஊழியர் Giorgio La Pira இறைஊழியர் Giorgio La Pira  

திருத்தந்தை: La Pira, நவீன காலத்தின் இறைவாக்கினர்

இறைஊழியர் Giorgio La Pira, உலகில் அமைதி ஏற்படவும், அரசியலில், திருஅவையின் சமூகக் கோட்பாடுகள் செயல்படுத்தப்படவும் மிகுந்த அக்கறை காட்டியவர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இத்தாலி மற்றும் உலக அளவில், அரசியல் வாழ்வில் ஒரு சிக்கலான சூழல் நிலவும் இக்காலத்தில், பொதுநலத்திற்குத் தொண்டுபுரியும், சிறப்பான மனித மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களைக் கொண்டிருக்கும் பொதுநிலை விசுவாசிகளும், அரசியல்வாதிகளும் தேவைப்படுகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இத்தாலிய கத்தோலிக்க அரசியல்வாதியான Giorgio La Pira அவர்களின் அறக்கட்டளையைச் சார்ந்த ஏறத்தாழ இருநூறு உறுப்பினர்களை, இவ்வெள்ளி நண்பகலில், வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவைக்கும், இக்கால உலகுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கும், Giorgio La Pira அவர்கள் வாழ்வு பற்றி சிந்திப்பது மிகவும் முக்கியம் என்று கூறினார்.

பல்கலைக்கழகப் பேராசிரியராக, குறிப்பாக, பிளாரன்ஸ் நகரிலும், சியன்னா, பீசா ஆகிய நகரங்களிலும் பல்வேறு விதமான பணிகளில் ஈடுபட்டிருந்ததுடன், பல்வேறு பிறரன்புப் பணிகளுக்கும், உலகில் அமைதி நிலவுவதற்கும், இறைஊழியர் Giorgio La Pira அவர்கள் தனது வாழ்வை அர்ப்பணித்திருந்தார் என்றும், இத்தாலியில் அரசியலில் ஈடுபட்டிருந்தவேளையில், கத்தோலிக்க சமூக கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதில் கவனம் செலுத்தினார் என்றும் பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைஊழியர் La Pira அவர்கள், ஏழைகள் மற்றும் சமுதாயத்தில் விளிம்புநிலையில் வாழ்வோர் மீது காட்டிய அன்பு, இவரின் ஆழ்ந்த கத்தோலிக்க விசுவாச வாழ்வு, போன்றவற்றை, Giorgio La Pira அறக்கட்டளை உறுப்பினர்கள் பின்பற்றி நடக்குமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

1904ம் ஆண்டு இத்தாலியில் பிறந்த இறைஊழியர் Giorgio La Pira அவர்கள், 1977ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி காலமானார். பிளாரன்ஸ் நகரின் மேயராக (1951-1965) இருமுறை பதவி வகித்த இவர், கிறிஸ்தவ சனநாயக கட்சியின் உதவித் தலைவராகவும், இரண்டாம் உலகப் போருக்குப்பின், இத்தாலிய அரசியலைமப்பு எழுதப்பட்ட அவையிலும் பங்கு வகித்தார். இவர், தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்வில், அமைதிக்கும், மனித உரிமைகள் காக்கப்படவும், ஏழைகளின் நலனுக்காகவும் உழைத்திருக்கிறார். கிறிஸ்தவ ஒன்றிப்புக்காகவும் உழைத்துள்ள இவர், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவை உறுப்பினர்களையும் சந்தித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2018, 15:15