தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

வருங்கால நம்பிக்கையின் சின்னங்களாக துறவறத்தார்

துறவறத்தாரிடம் எதிர்பார்க்கப்படுபவை: இளையோரிடையே நற்செய்தி, சோர்வின்றி இரக்கச் செயல்கள், வறியோருடன் இணைந்து நடத்தல்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இஸ்பெயின் நாட்டின் ஆண், பெண் துறவுசபைகளின் கூட்டமைப்பான CONFER உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு, தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'நம்பிக்கை நிறைந்த எதிர்காலத்தை உனக்கு நான் வழங்குவேன்' என்று இறைவாக்கினர் எரேமியா நூலில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை மையக்கருத்தாகக் கொண்டு, இஸ்பெயினின் மத்ரித் நகரில் இடம்பெறும் CONFER கூட்டமைப்பிற்கு செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, உடன்பிறந்த உணர்வு, ஒருவருக்கொருவர் உதவுதல், ஒன்றிப்பு, ஒருமைப்பாடு ஆகியவை வழியாக கடந்த ஆண்டுகளில் ஆற்றப்பட்டுள்ள பணிகளை அதில் பாராட்டியுள்ளார்.

தேவ அழைத்தல்களின் எண்ணிக்கை குறைதல், துறவு சபை அங்கத்தினர்களின் முதுமை, பொருளாதார சிக்கல்கள், உலக மயமாக்கல் முன்வைக்கும் சவால்கள் போன்றவைகளால், துறவுசபைகள், பிரச்னைகளை சந்தித்துவரும் வேளையிலும், வருங்காலத்திற்கான நம்பிக்கையின் சின்னங்களாக ஒவ்வொரு துறவறத்தாரும் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

இளையோரிடையே நற்செய்தி அறிவிக்கப்படவேண்டிய தேவை, சோர்வின்றி இரக்கச் செயல்களை ஆற்றுதல், இறைவனின் துணையோடு வறியோருடன் இணைந்து நடத்தல், நற்செய்திக்கு விசுவாசமாக இருந்து இன்றைய சவால்களை எதிர்நோக்குதல், செபத்தின் முக்கியத்துவம் போன்றவை குறித்தும் தன் வாழ்த்துச் செய்தியில் விவரித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2018, 16:05