Venezia in rosso அதாவது, “சிவப்பு ஒளியில் வெனிஸ்” எனப்படும்  புதிய நடவடிக்கை Venezia in rosso அதாவது, “சிவப்பு ஒளியில் வெனிஸ்” எனப்படும் புதிய நடவடிக்கை 

“சிவப்பு ஒளியில் வெனிஸ்” நடவடிக்கைக்கு திருத்தந்தை செய்தி

“சிவப்பு ஒளியில் வெனிஸ்” நடவடிக்கை, உலகின் பல பாகங்களில் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் துன்பங்களை உலகுக்கு எடுத்துரைப்பதாய் உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனிதரின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகிய சமய சுதந்திரம் அங்கீகரிக்கப்படும்போது, அவரின் மேலான மாண்பு ஏற்கப்படுவதைக் காட்டுகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

Venezia in rosso அதாவது, “சிவப்பு ஒளியில் வெனிஸ்” எனப்படும் தலைப்பில், வெனிஸ் முதுபெரும்தந்தையும், தேவையில் இருப்போருக்கு உதவும் உலகளாவிய திருஅவை அமைப்பும் இணைந்து, இச்செவ்வாய் மாலையில், இத்தாலியின் வெனிஸ் நகரில் தொடங்கும் புதிய நடவடிக்கையை ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை

இந்நடவடிக்கை, உலகின் பல பாகங்களில் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் துன்பங்களை உலகுக்கு எடுத்துரைப்பதாய் உள்ளது என்று கூறியுள்ள திருத்தந்தை, இந்நடவடிக்கையில் கலந்துகொள்ளும் இளையோரைப் பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளார்.

ஒரே மதம் நடைமுறையிலுள்ள நாடுகளும், இயேசுவின் சீடர்கள் என்பதாலேயே, கடுமையான சித்ரவதைகளுக்கும், திட்டமிட்ட கலாச்சார இகழ்ச்சிகளுக்கும் கிறிஸ்தவர்கள் உள்ளாக்கப்படும் நாடுகளும் இருப்பதால், வெனிஸ் நகரிலும், கொலோசேயம் போன்ற முக்கிய நினைவுச்சின்னங்களிலும் தொடங்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை இன்றியமையாதது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

சமய சுதந்திரத்திற்கு எதிராய் இடம்பெறும் பல்வேறு மீறல்களை உலகினரின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கத்தில், இச்செவ்வாய் மாலையில், வெனிஸ் உயர்மறைமாவட்ட இளையோர், அந்நகரின் ஆரோக்ய அன்னை பசிலிக்காவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு சிவப்பு ஒளியை ஏற்றுகின்றனர். அதேபோல், அந்நகரின் பிற முக்கிய இடங்களிலும், இவ்வொளி ஏற்றப்படுகின்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தியை, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வெனிஸ் முதுபெரும்தந்தை பிரான்செஸ்கோ மொராலியா அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, தற்போது விடுதலையடைந்துள்ள ஆசியா பீபி அவர்களுக்கு ஆதரவு வழங்கும் விதமாகவும் இந்த சிவப்பு விளக்குகள் வெனிஸ் நகரில் ஏற்றப்படுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2018, 15:05