தேடுதல்

திருத்தந்தை, ஈராக் அரசுத்தலைவர் Barham Saleh திருத்தந்தை, ஈராக் அரசுத்தலைவர் Barham Saleh  

திருத்தந்தை, ஈராக் அரசுத்தலைவர் Saleh சந்திப்பு

ஈராக் அரசுத்தலைவர் Barham Saleh அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை தனது நாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டின் அரசுத்தலைவர் Barham Saleh அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, நவம்பர் 24, இச்சனிக்கிழமை காலையில், ஏறத்தாழ 25 நிமிடங்கள் திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

தனது துணைவியார் மற்றும் ஏறத்தாழ பத்து அரசு பிரதிநிதிகளுடன் வத்திக்கான் சென்றிருந்த ஈராக் அரசுத்தலைவர் Saleh அவர்கள், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார்

திருப்பீடத்திற்கும், ஈராக் நாட்டிற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், ஈராக்கின் அரசியலில் காணப்படும் நல்ல முன்னேற்றங்கள், தேசிய ஒப்புரவு முயற்சிகளில் எதிர்கொள்ளும் சவால்களை, உலகளாவிய சமுதாயத்தின் ஆதரவுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் போன்றவை இச்சந்திப்புகளில் இடம்பெற்றன.

மேலும், ஈராக் நாட்டின் ஒருங்கிணைந்த அங்கமாக, காலம் காலமாக வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்கள், சமூகநலனைக் கட்டியெழுப்புவதில் ஆற்றிவரும் பணிகள், நாட்டைவிட்டு கட்டாயமாக வெளியேறியவர்கள் மீண்டும் தங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்பவேண்டியதன் முக்கியத்துவம், நாடு திரும்பும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு, ஈராக்கின் வருங்காலத்தில் அவர்களுக்கு பங்கு, அப்பகுதியைப் பாதித்துள்ள பல்வேறு சண்டைகள், மனிதாபிமான நெருக்கடிகள் ஆகியவையும் இச்சந்திப்புகளில் இடம்பெற்றன.

இறுதியில், பல்வேறு இன மற்றும் சமயக் குழுக்கள் மத்தியில், நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு, உரையாடல் அவசியம் எனவும், இச்சந்திப்புகளில் வலியுறுத்தப்பட்டன.

இன்னும், இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஈராக் அரசுத்தலைவர் Barham Saleh அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, நாட்டிற்கு திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்தார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 24, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இரக்கப் பண்பின்றி நம்மில் எவரும் வாழ இயலாது, நம் எல்லாருக்கும் மன்னிப்பு தேவைப்படுகின்றது என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2018, 15:31