தேடுதல்

மாரனைட் கத்தோலிக்க வழிபாட்டுமுறை ஆயர்களுடன் திருத்தந்தை மாரனைட் கத்தோலிக்க வழிபாட்டுமுறை ஆயர்களுடன் திருத்தந்தை 

புலம்பெயர்ந்தோரை வரவேற்றுள்ள லெபனானுக்கு நன்றி

லெபனானில் முஸ்லிம் சகோதரர்களுடன் உடன்பிறப்பு உணர்வில் வாழ்ந்துவரும் அந்நாட்டு கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை பாராட்டு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

லெபனான் மாரனைட் அறக்கட்டளை மற்றும் லெபனான் அமைப்பின் ஏறத்தாழ 53 உறுப்பினர்களை, இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனானில், லெபனான் கிறிஸ்தவ சமூகம் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

ஷியைட், சுன்னி ஆகிய இரு பிரவு முஸ்லிம்களுக்கு இடையில் சமநிலை காப்பது, தேசபக்தியோடு உடன்பிறப்பு உணர்வில் வாழ்வது ஆகிய இரு பண்புகளைக் கொண்டிருக்கும் லெபனான் கிறிஸ்தவர்களைப் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனான் மக்கள், பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்று உதவி வருவதற்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும், 15க்கும் அதிகமான நாடுகளில் மறைப்பணியாற்றும், மாரனைட் கத்தோலிக்க வழிபாட்டுமுறையின் ஆயர்களையும், அத் லிமினா சந்திப்பையொட்டி, இச்செவ்வாய் காலையில் திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

லெபனான் மாரனைட் வழிபாட்டுமுறையின் முதுபெரும்தந்தை கர்தினால் Béchara Boutros Raï அவர்கள் தலைமையில், லெபனான், இஸ்ரேல், ஜோர்டன், பாலஸ்தீனம், எகிப்து, சைப்ரஸ், கிரேக்கம், பல்கேரியா, ருமேனியா, நைஜீரியா, கானடா, அமெரிக்க ஐக்கிய நாடு, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, சிரியா, பிரேசில், பிரான்ஸ், அர்ஜென்டீனா, கொலம்பியா ஆகிய நாடுகளில் மறைப்பணியாற்றும், மாரனைட் வழிபாட்டுமுறையின் பேராயர்கள், ஆயர்கள் என, இருபதுக்கும் அதிகமானோரைச் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2018, 14:59