தேடுதல்

உலக நற்கருணை மாநாட்டிற்கான பாப்பிறைக் கழக அங்கத்தினர்களை சந்தித்த திருத்தந்தை உலக நற்கருணை மாநாட்டிற்கான பாப்பிறைக் கழக அங்கத்தினர்களை சந்தித்த திருத்தந்தை  

நற்கருணை கலாச்சாரத்தை உருவாக்க உழைப்போம்

திருப்பலிகளில் இறை உடலை பகிர்ந்துகொள்வதன் வழியாக, நாமனைவரும் சகோதர சகோதரிகளாக வெளிப்படுத்தப்படுகிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடவுள் சார்பற்ற நவீன சமூகத்தின், மற்றும், உலக மயமாக்கலின், சவால்களை எதிர்கொள்ளும் வகையில், அடுத்த அனைத்துலக நற்கருணை மாநாடு அமையும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக நற்கருணை மாநாட்டிற்கான பாப்பிறைக் கழகத்தின் நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அங்கத்தினர்களை, இச்சனிக்கிழமையன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு, ஹங்கேரி நாட்டில் இடம்பெறவுள்ள, அடுத்த உலக நற்கருணை மாநாடு, செபம், மற்றும் செயல்பாடுகள் வழியாக, நற்கருணைக் கலாச்சாரத்தை உருவாக்க உதவும் என்று கூறினார்.

பாராமுகம், பிரிவினைகள் மற்றும் ஒதுக்கி வைக்கும் போக்குகளால் நிறைந்துள்ள இன்றைய உலகில், ஞாயிறு தோறும் கோவில்களில் கூடும் கிறிஸ்தவர்கள், இறை உடலை பகிர்ந்து கொள்வதன் வழியாக, தாங்களனைவரும் சகோதரர், சகோதரிகள் என்பதை உலகிற்கு காட்டி வருகின்றனர் என்றார் திருத்தந்தை.

இறைவனின் உடல் மற்றும் இரத்தத்தால் ஊட்டம் பெறும் இந்நற்கருணை பலி விழா, இறைவனோடும், நம் சகோதர சகோதரிகளோடும் ஒன்றிப்பை உருவாக்குவதாகவும், மற்றவர்களுக்கு பணிவிடை புரிவதற்குரிய நோக்கத்தைத் தருவதாகவும், கருணையின் வலிமையை உணர்த்துவதாகவும் உள்ளது என மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2018, 16:39