போலந்து பிரதமர் மற்றும் அவர் குடும்பத்தினருடன் திருத்தந்தை போலந்து பிரதமர் மற்றும் அவர் குடும்பத்தினருடன் திருத்தந்தை 

போலந்து சுதந்திரத்தின் நூறாண்டுகள் – திருத்தந்தை செய்தி

இறைவனின் உதவியுடன் போலந்து மக்கள் தங்கள் நம்பிக்கையை உயிர் துடிப்புடன் காத்து வருவது குறித்து திருத்தந்தையின் பாராட்டுக்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

முதல் உலகப்போருக்குப் பின் விடுதலை அடைந்த போலந்து நாட்டு மக்கள், அதற்குப்பின் இரண்டாம் உலகப்போராலும், கம்யூனிச ஆட்சியாலும் பல்வேறு துயரங்களை அனுபவித்தபோதிலும், தங்கள் நம்பிக்கையை இழக்காமல், தொடர்ந்து உறுதியோடு வாழ்ந்து வருவது குறித்து, தன் பாராட்டுக்களை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

போலந்து நாடு சுதந்திரம் அடைந்ததன் நூறாமாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருவதையொட்டி, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Stanisław Gądecki அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

கிறிஸ்தவ ஐரோப்பாவின் வரலாற்று வளர்ச்சிக்கு, போலந்து நாடு ஆற்றியுள்ள பங்களிப்பு குறித்தும், தாய் நாட்டின் மீது கொண்ட பற்றிற்காக அந்நாட்டு மக்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்துள்ளது குறித்தும், இறைவனின் உதவியுடன் அம்மக்கள் தங்கள் நம்பிக்கையை உயிர் துடிப்புடன் காத்து வருவது குறித்தும் திருத்தந்தை தன் பாராட்டுக்களை, இவ்வாழ்த்துச் செய்தியில் வெளியிட்டுள்ளார்.

சுதந்திரம் என்ற விலைமதிப்பற்ற கொடையைக் கொண்டாடிவரும் போலந்து மக்கள், விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்புடன், ஒன்றிப்பிலும், அமைதியிலும் வாழ்வார்களாக என்ற வாழ்த்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இதற்கிடையே, போலந்து நாடு சுதந்திரம் அடைந்ததன் நூறாமாண்டு கொண்டாட்டங்களையொட்டி, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், உரோம் நகரின் மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், போலந்து உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2018, 16:15