தேடுதல்

பார்வைத்திறனற்றோர் அப்போஸ்தலிக்க இயக்க உறுப்பினர்கள் சந்திப்பு பார்வைத்திறனற்றோர் அப்போஸ்தலிக்க இயக்க உறுப்பினர்கள் சந்திப்பு  

ஏழைகளை மையப்படுத்துவது நற்செய்தி பணிக்கு சிறப்பு சேர்க்கும்

ஏழைகள், தேவையில் இருப்போர், ஆகியோரில் கிறிஸ்துவின் முகத்தைக் கண்டு அம்மக்களை அன்புகூரவும், அவர்களுக்காக குரல் கொடுக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

வறியோர், கைவிடப்பட்டோர், விளிம்புநிலையில் இருப்போர் ஆகியோருடன் பகிர்ந்து வாழ்வதிலும், நட்புணர்வுடன் இருப்பதிலும், மனித சமுதாயத்தின் வருங்காலம் அமைந்துள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார்.

பார்வைத்திறனற்றோர் அப்போஸ்தலிக்க இயக்கத்தின் நானூறுக்கு அதிகமான உறுப்பினர்களை, இச்சனிக்கிழமை காலையில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழைகளுடன் பகிர்தல், ஒருமைப்பாடுகொள்தல், ஒருங்கிணைதல் ஆகியவை, நற்செய்தி பணியை ஆற்றுவதற்கு சிறந்த வழியாகும் என்று கூறினார்.

மரிய மோத்தா எனப்படும் பார்வைத்திறனற்ற பெண்ணால், 1928ம் ஆண்டில், அதாவது 90 ஆண்டுகளுக்கு முன்னர் பார்வைத்திறனற்றோர் அப்போஸ்தலிக்க இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது என்று குரலை உயர்த்தி கூறியத் திருத்தந்தை, இப்பெண், பார்வைக் குறைபாடால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் துணிச்சலுடன் மேற்கொண்டு, தனித்து நின்று, விசுவாசத்திற்குச் சான்று பகர்ந்தார் என்று பாராட்டினார்.

பார்வைத்திறனற்றோர் அப்போஸ்தலிக்க இயக்கம், இயேசுவின் அழைப்பை ஏற்று, உலகில் மிகவும் துன்புறுகின்ற மற்றும், மிகவும் வறிய நிலையில் இருக்கின்ற மக்களுக்கு பணிகளை ஆற்றிவருகின்றது என்று பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாற்றுத்திறன் கொண்ட உலகிற்கு, தெளிவான செயல்களால் பதிலளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.    

இந்த இயக்கம் 90 ஆண்டுகளாக சேவையாற்றி வருவதுடன், உலகின் தென் பகுதியிலுள்ள ஏழை நாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்கத் தொடங்கியதன் ஐம்பதாம் ஆண்டையும் சிறப்பிக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, இந்த நாடுகளில் பார்வைத்திறனற்றோர் மற்றும் ஏழைகள் பெருமளவில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2018, 14:40