"Shahbaz Bhatti" அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை "Shahbaz Bhatti" அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை 

Shahbaz Bhatti அறக்கட்டளைக்கு திருத்தந்தை பாராட்டு

பாகிஸ்தான் கிறிஸ்தவர்களுக்கும், குறிப்பாக, கடின வாழ்வை அனுபவிக்கும் எல்லாருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

வறுமை மற்றும் பல்வேறு விதமான நவீன அடிமைத்தனங்களை அகற்றுவதற்கு பணியாற்றிவரும் பாகிஸ்தானின் தன்னார்வல அமைப்பு ஒன்றைப் பாராட்டி, ஊக்குவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பாகிஸ்தானின் "Shahbaz Bhatti" அறக்கட்டளையின் ஏறத்தாழ 33 உறுப்பினர்களை, இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Shahbaz Bhatti அவர்கள் செய்த தியாகம், நம்பிக்கையின் வளமையான கனிகளைக் கொணர்ந்துள்ளது என்று கூறினார்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில், அம்மக்கள் அனுபவித்துள்ள துன்பங்கள், கலந்துரையாடல், புரிந்துகொள்ளுதல், ஒப்புரவு, வலிமை, துணிச்சல், கனிவு ஆகியவற்றில் கனிகளைக் கொணர்ந்துள்ளன என்றும், அவை, "Shahbaz Bhatti" அறக்கட்டளை போன்ற குழுக்களும், கழகங்களும் வளர்வதற்கு உதவுகின்றன என்றும் திருத்தந்தை கூறினார்.

பாகிஸ்தானில் பாகுபடுத்தப்படும் கிறிஸ்தவர்கள், தவறான குற்றச்சாட்டுகளுக்குப் பலியானவர்கள், மற்றும், அநீதிக்கும் வன்முறைக்கும் பலியாகும் மக்களுக்கு இந்த அறக்கட்டளை ஆற்றிவரும் பணிகளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

"Shahbaz Bhatti" அறக்கட்டளை போன்ற அமைப்புகள், இனம், மொழி, கலாச்சாரம், போன்ற வேறுபாடுகளின்றி, உலகெங்கும் மட்டுமல்லாமல், திருஅவைகள் மற்றும் திருஅவை சமூகங்களுக்கு இடையே உடன்பிறப்பு உணர்வு கொண்ட பாலங்களைக் கட்டியெழுப்ப உதவுகின்றன எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் (யோவா.12:24)” என்ற இயேசுவின் திருச்சொற்கள், Shahbaz Bhatti அவர்களுக்கு முற்றிலும் பொருந்தும் என்றும் கூறியத் திருத்தந்தை, Shahbaz Bhatti அவர்களின் தம்பியாகிய Paul Bhatti அவர்கள் தலைமையில் வந்திருந்த குழுவினரைப் பாராட்டினார்.

பாகிஸ்தானின் அரசியல்வாதியாகிய Clement Shahbaz Bhatti அவர்கள், 2008ம் ஆண்டு நவம்பர் முதல், அவர் கொலைசெய்யப்பட்ட 2011ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி முடிய, அந்நாட்டின் சிறுபான்மையினர் நல விவகார அமைச்சராகப் பணியாற்றினார். இவர், அச்சமயம் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்த ஒரே கிறிஸ்தவர் ஆவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2018, 15:24