தேடுதல்

Knigh ts of the Holy Sepulchre அமைப்பினர் சந்திப்பு Knigh ts of the Holy Sepulchre அமைப்பினர் சந்திப்பு 

சான்று பகரும் வாழ்வுக்கு பிறரன்பு மையமாக வேண்டும்

மத்திய கிழக்கில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு கலந்துரையாடலும், ஒருவரையொருவர் மதித்தலும் அவசியம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஒரு பக்த அமைப்பு, தன் பணிகளின் மையமாகவும், இறுதி இலக்காகவும் பிறரன்பை மையப்படுத்தி செயல்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் தான் சந்தித்த, Knights of the Holy Sepulchre எனப்படும் புனித கல்லறை திருப்பீட அமைப்பின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

உலகில் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் பணியாற்றும் இந்த அமைப்பின் உள்ளூர் தலைவர்களின் பணி என்ன என்பது பற்றி வத்திக்கானில் கூட்டம் நடத்திவருவது பற்றி குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், அதன் உறுப்பினர்களின் ஆன்மீக வளர்ச்சி என்பதை மறக்கக்கூடாது என்று கூறினார்.

கிறிஸ்தவர்கள் சித்ரவதைக்கு உட்படுத்தப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்துவரும் இவ்வுலகில், சில மக்களாட்சி நாடுகளில் சமய சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதும் இடம்பெற்று வருகின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறும் இம்மக்களுக்கு பொருளாதார உதவிகளை ஆற்றும் பணி, எப்போதும் செபத்தோடு ஒன்றிணைந்து செல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

புனித கல்லறை திருப்பீட அமைப்பினர், பொருளாதார மற்றும் சமூகநலத்தை முன்னேற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், நற்செய்தி அறிவுறுத்தும் பிறரன்பில் கவனம் செலுத்துமாறும், அதன்வழியாக அவர்கள் இறையன்புக்குச் சான்று பகர இயலும் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார். இந்த அமைப்பினர், புலம்பெயர்ந்த மக்களுக்கு ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றியும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1113ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் பாஸ்கால் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட புனித கல்லறை திருப்பீட அமைப்பு, புனித பூமியில் கிறிஸ்தவர்களின் இருப்புக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இன்று உலகெங்கும் ஏறத்தாழ முப்பதாயிரம் உறுப்பினர்கள் இந்த அமைப்பில் உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2018, 14:55