இராட்ஸிங்கர் விருதைப் பெற்ற Marianne Schlosser, Mario Botta  இராட்ஸிங்கர் விருதைப் பெற்ற Marianne Schlosser, Mario Botta  

இறையியலார், கட்டட கலைஞருக்கு இராட்ஸிங்கர் விருது

பேராசிரியர் Marianne Schlosser, கட்டட கலைஞர் Mario Botta ஆகிய இருவருக்கும் இராட்ஸிங்கர் விருதை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பெரும் பிரச்சனைகள் நிறைந்த இக்கால சூழலில், இறையியலும், கலையும், தூய ஆவியாரின் வல்லமையால் உயிரூட்டம் பெற்று, உயர்வடைய வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள இராட்ஸிங்கர் (Ratzinger) அறக்கட்டளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் 200 பேரை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

இவ்வாண்டின் இராட்ஸிங்கர் விருதைப் பெற்ற இறையியல் பேராசிரியர் Marianne Schlosser, கட்டட கலைஞர் Mario Botta  ஆகிய இருவரையும் பாராட்டி பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையியல் ஆய்வில் பெண்கள் ஆற்றிவரும் பணிகள் அதிகமதிகமாக அங்கீகரிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திருஅவையின் வாழ்வில், பல்வேறு துறைகளில், குறிப்பாக, கலாச்சார துறைகளில் பொறுப்புடன் செயல்படும் பெண்களின் இருப்பு அதிகரித்துவருவது பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, புனிதர்கள் அவிலா தெரேசா, சியன்னா கத்ரீன் ஆகியோரை, புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், திருஅவையின் மறைவல்லுனர்களாக அறிவித்ததிலிருந்து, விசுவாசத்தைப் புரிந்துகொள்வதில் பெண்கள் உயர்நிலையை எட்ட முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை எனத் தெரிகின்றது என்று கூறினார்.

கிறிஸ்தவ உணர்வில் கலைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் இராட்ஸிங்கர் விருது வழங்கப்படுவது பற்றியும் பேசிய திருத்தந்தை, இவ்விருதைப் பெறும் கட்டட கலைஞர் Mario Botta அவர்களைப் பாராட்டியதுடன், இத்தகைய கலைஞர்கள், திருஅவையால் அங்கீகரிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2018, 14:46