அல்பேனிய திருப்பயணிகள் சந்திப்பு அல்பேனிய திருப்பயணிகள் சந்திப்பு 

அல்பேனியா, பழம்சிறப்புமிக்க வரலாறைக் கொண்டுள்ளது

அல்பேனியாவின் விடுதலை வீரர் George Castriot அவர்கள் இறந்ததன் 550ம் ஆண்டை முன்னிட்டு, திருப்பீடத்தில் அல்பேனியத் திருப்பயணிகளை திருத்தந்தை சந்தித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பழம்சிறப்புமிக்க மற்றும் மகிமையான வரலாறைக் கொண்டுள்ள அல்பேனியா, தனது தனித்த கலாச்சாரத்தால், ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த அங்கமாக உள்ளது என்று பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Skanderbeg என அழைக்கப்படும் அல்பேனியாவின் விடுதலை வீரர் George Castriot அவர்கள் இறந்ததன் 550ம் ஆண்டை முன்னிட்டு, இத்திங்கள் மாலையில், ஏறத்தாழ இருநூறு அல்பேனிய நாட்டு திருப்பயணிகளை, திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, Skanderbeg அவர்கள், ஆன்மீக விழுமியங்கள் மற்றும் கிறிஸ்தவ பெயரைத் தாங்கி துணிச்சலுடன் போராடியதை நாம் இன்று நினைவுகூர்கின்றோம் என்று கூறினார்.

Skanderbeg அவர்கள், தனது செயல்களால், அல்பேனிய கலாச்சாரத் தனித்துவத்தைக் கட்டிக்காத்து, நாட்டின் தேசிய ஒன்றிப்புக்கு நிகரற்ற அடையாளமாய் மாறியுள்ளார் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Skanderbeg அவர்களின் இறப்பு மற்றும் அதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆக்ரமிப்பால், பல கிறிஸ்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியது பற்றியும் பேசினார்.

Skanderbeg அவர்களை நினைவுகூரும் இவ்வேளையில், கடந்தகால மகிமையான செயல்களைக் கொண்டாடுவதோடு நிறுத்திவிடாமல், நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அதன்வழியாக இளையோர் நாட்டைவிட்டு வெளியேறுவது தடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2018, 15:20