தேடுதல்

Vatican News
ஆப்ரிக்க குழுவினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் ஆப்ரிக்க குழுவினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

தீவிரவாத தாக்குதலாலும், பேரிடராலும் உயிரிழந்தோருக்கு செபம்

புலம்பெயர்ந்த கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி, 42 பேரின் உயிரைப் பறித்துள்ள மத்திய ஆப்ரிக்க குடியரசின் தீவிரவாத குழு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத்திய ஆப்ரிக்க குடியரசில் கடந்த வியாழனன்று, அரசு எதிர்ப்புத் தீவிரவாதிகளால் 42 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டது குறித்து, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு, அவர்களுக்காக செபிக்கும்படி விண்ணப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய ஆப்ரிக்க குடியரசின் Alindao புலம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியிருந்த மக்களை, கொலை செய்ததோடு, அவர்களின் பொருட்களையும் திருடிச்சென்ற இத்தீவிரவாதிகள், அருகாமையிலிருந்த பேராலயத்தையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளது குறித்து, தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டத் திருத்தந்தை, இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காகவும், அந்நாட்டில் வன்முறைகள் முடிவுக்கு வரவேண்டுமெனவும் இணைந்து செபிப்போம் என அழைப்பு விடுத்தார்.

அந்நாட்டில், தான் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது, பாங்கி (Bangui) பேராலயத்தில், இரக்கத்தின் ஜூபிலி ஆண்டின் முதல் கதவை திறந்து வைத்ததை தன் மூவேளை செப உரையில் நினைவு கூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியின் தேவை அதிகம் அதிகமாக இருக்கும் மத்திய ஆப்ரிக்க குடியரசின் மக்களை நினைவு கூர்வோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிஃபோர்னியாவில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்கள், அந்நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதியில் குளிரால் உயிரிழந்தவர்கள் ஆகியோர் பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்காகவும் இறைவனிடம் செபித்தார்

18 November 2018, 14:00