நவம்பர் 1, புனிதர் அனைவரின் திருநாளையொட்டி வழங்கிய மூவேளை செப உரை நவம்பர் 1, புனிதர் அனைவரின் திருநாளையொட்டி வழங்கிய மூவேளை செப உரை 

புனிதர் அனைவரின் திருநாளையொட்டி மூவேளை செப உரை

புனிதர் அனைவரின் திருநாளன்று, நம் குடும்பங்களில், நம் பக்கத்து வீடுகளில் வாழ்ந்து மறைந்த அனைவரையும் கொண்டாடுகிறோம். எனவே, இது, ஒரு குடும்ப விழா - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'தூயவர், தூயவர், தூயவர், மூவுலகின் இறைவனாம் ஆண்டவர்' என்று திருப்பலியில் நாம் பாடும் பாடல், விண்ணகத்திலிருந்து வந்த பாடல் என விவிலியம் கூறுகிறது (காண்க. எசா. 6,3 தி.வெளிப்பாடு 4,8) என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 1, இவ்வியாழன் வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.

நவம்பர் 1 சிறப்பிக்கப்பட்ட புனிதர் அனைவரின் திருநாளையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, விண்ணகத்தில் புனிதர்கள் இறைவனைப் புகழ்ந்து மகிழ்வுடன் பாடும் 'தூயவர், தூயவர்' என்ற பாடலை, திருப்பலி நேரத்தில் நாம் பயன்படுத்தும் வேளையில், நாமும் அவர்களுடன் இணைகிறோம் என்று கூறினார்.

அனைத்துப் புனிதர்கள் என்று கூறும்போது, திருவழிபாட்டு நாள்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள புனிதர்களை மட்டும் நாம் கொண்டாடுவதில்லை, மாறாக, நம் குடும்பங்களில், நம் பக்கத்து வீடுகளில் வாழ்ந்து மறைந்த அனைவரையும் கொண்டாடுகிறோம் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது உண்மையிலேயே ஒரு குடும்ப விழா என்பதை வலியுறுத்தினார்.

நமக்குத் தெரிந்த புனிதர்கள் அனைவரும் நம்மை மகிழ்வுடன் வாழ்வதற்குத் தூண்டுகின்றனர் என்றும், இந்த மகிழ்வு, இன்றைய நற்செய்தியில் இயேசு வழங்கும் பேறுபெற்றோர் பகுதியில் கூறப்பட்டுள்ள உண்மைகளில் அடங்கியுள்ளது என்றும் தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை.

அறிவுக்கூர்மையுடன், செல்வத்துடன், பெருமையுடன் வாழ்வோரே பேறுபெற்றோர் என்று இவ்வுலகம் காட்டும் வழிகளுக்கு மாற்றாக, தூய்மையான உள்ளத்தோர், ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் என்று இயேசு வழங்கும் வழி, உண்மையான மகிழ்வைக் கொணரும் என்பதற்கு, புனிதர்கள் சான்றுகளாய் உள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

புனிதர்களின் அரசியும், இறைவனின் அன்னையுமான மரியா நம் அனைவரையும் புனிதத்தின் பாதையில் வழிநடத்துவாராக என்ற விண்ணப்பத்துடன் திருத்தந்தை தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2018, 13:17