ஞாயிறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை - 041118 ஞாயிறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை - 041118 

இறையன்பும் பிறரன்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

நம் அயலவரிடையே எவ்வித கட்டுப்பாடும் இன்றி பணிபுரியவும், எல்லைகளின்றி மன்னிக்கவும், ஒன்றிப்பிலும் சகோதரத்துவத்திலும் உறவுகளை வளர்க்கவும் அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மறைநூல் அறிஞருள் ஒருவர் இயேசுவை நோக்கி, முதன்மையான கட்டளை குறித்த கேள்வியை எழுப்பியதையும், அதற்கு இயேசு வழங்கிய பதிலையும் மையப்படுத்தி, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நற்செய்தியில் இடம்பெறும் இக்கேள்வி குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் ஒருவரே, அவரை முழு இதயத்தோடு அன்புகூர வேண்டும் என்றும், நம்மை அன்புகூர்வதுபோல், நமக்கு அடுத்திருப்பவரையும் அன்புகூர வேண்டும் எனவும், இயேசு கூறிய வார்த்தைகள், ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்றும், இறைவன் மீது கொள்ளும் அன்பும், அடுத்திருப்பவர் மீது கொள்ளும் அன்பும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை எனவும் எடுத்துரைத்தார்.

இறைவன் மீது நாம் கொள்ளும் அன்பும், மனிதர் மீது நாம் கொள்ளும் அன்பும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை மட்டுமல்ல, ஒன்றுக்கொன்று உதவக்கூடியவை எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளை அன்புகூர்வது என்பது, அவரருகே அவருக்காக வாழ்ந்து, அவருடன் இணைந்து உழைப்பவர்களாக, அதாவது நமக்கு அடுத்திருப்பவரிடையே எவ்வித கட்டுப்பாடும் இன்றி பணிபுரிவதையும், எல்லைகளின்றி மன்னிப்பதையும், ஒன்றிப்பிலும் சகோதரத்துவத்திலும் உறவுகளை வளர்ப்பதையும் குறித்து நிற்கின்றது என, தன் மூவேளை செப உரையின்போது மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏழைகளின் வெளிப்புறத் தேவைகளை நாம் நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல, அவர்கள் எதிர்பார்க்கும் உடன்பிறந்த நெருக்கத்தையும், அக்கறையையும் நாம் வெளிப்படுத்தவேண்டும் என இஞ்ஞாயிறு நற்செய்தி எதிர்பார்க்கிறது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பே உருவாக விளங்கும் கடவுள், பிறரை அன்புகூர வேண்டும் என்ற நோக்கத்தினாலேயே, அன்பிலிருந்து நம்மைப் படைத்தார் என்றும், இறையன்பும் பிறரன்புமே இயேசுவின் சீடரைச் சித்திரிக்கும் குணநலன்களாக உள்ளன என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2018, 12:47