UNIAPACன்  26வது மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் UNIAPACன் 26வது மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் 

UNIAPAC கிறிஸ்தவ ஒன்றியத்திற்கு திருத்தந்தை மடல்

மனித உழைப்பும், வர்த்தகமும், நம்பிக்கை, மற்றும் கூடுதலான பொறுப்புணர்வு ஆகியவற்றை வளர்ப்பதாக அமையவேண்டும் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன்றைய உலகில் நிலவும் உலகமயமாக்கலின் தாக்கத்தால், வர்த்தகத்தைக் குறித்த கண்ணோட்டமும், வர்த்தகத்தின் இலக்கும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

UNIAPAC என்றழைக்கப்படும் பன்னாட்டு மேலாண்மை இயக்குனர்களின் கிறிஸ்தவ ஒன்றியம் என்ற அமைப்பு, போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் ஏற்பாடு செய்திருந்த 26வது மாநாட்டிற்கு, திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார்.

"மேலாண்மை, ஒரு மேன்மையான அழைப்பு" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பன்னாட்டு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள பன்னாட்டு மேலாண்மை இயக்குனர்களின் கிறிஸ்தவ ஒன்றியம், கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிவரும் பணியை திருத்தந்தை பாராட்டினார்.

உழைப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளைக் குறித்து, திருஅவை வெளியிட்டுள்ள கருத்துக்களை, மூன்று அம்சங்களாகக் காணமுடியும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மூன்று அம்சங்களையும் தன் செய்தியில் விளக்கிக் கூறியுள்ளார்.

உழைப்பு, மற்றும், வர்த்தகம், ஆகிய இரண்டும், மனிதர்களை மையப்படுத்தி அமையவேண்டும், பொதுவான நலனில் அக்கறை காட்ட வேண்டும், மற்றும் இறைவனின் படைப்புத் திறனோடு மனித உழைப்பு இணைக்கப்படவேண்டும் என்ற மூன்று கருத்துக்களை திருஅவை வலியுறுத்தி வந்துள்ளது என்பதை, திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மனித உழைப்பும், வர்த்தகமும், நம்பிக்கை, மற்றும் கூடுதலான பொறுப்புணர்வு ஆகியவற்றை வளர்ப்பதாக அமைவதை, மேலாண்மைத் துறையில் பணியாற்றும் அனைத்து தலைவர்களும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்பதை, திருத்தந்தை தன் செய்தியின் இறுதியில் ஒரு விண்ணப்பமாக வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2018, 14:24