செபிப்போரின் உலக நாள் நிகழ்வு செபிப்போரின் உலக நாள் நிகழ்வு 

செபிப்போரின் நாளுக்கென திருத்தந்தை வழங்கிய செய்தி

ஆழ்நிலை தியானத்தின் வழியே, செபத்தால், திருஅவையைத் தாங்கிவரும் துறவியர் இல்லையெனில், இவ்வுலகில் பயணம் செய்யும் திருஅவை, வலுவிழந்து போகும் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆழ் நிலை தியான வாழ்வை மேற்கொள்வதன் வழியே, இறைவனின் முகத்தைக் காண்பதிலும், திருஅவையின் மறைப்பணியில் ஈடுபடுவதிலும் இணைந்துள்ள அனைத்து துறவியரையும் வாழ்த்துவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

நவம்பர் 21, இப்புதனன்று, புனித கன்னி மரியா காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட திருநாள் சிறப்பிக்கப்பட்ட வேளையில், ஆழ்நிலை தியானத்தை தங்கள் வாழ்க்கைப் பாதையாக தெரிவு செய்துள்ள இருபால் துறவியரின் உலக நாளும் சிறப்பிக்கப்படுகிறது.

செபிப்போரின் நாளென சிறப்பிக்கப்படும் இந்த நாளன்று, உரோம் நகர், புனித ஜான் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் கூடிய துறவியருக்கு திருத்தந்தை அனுப்பிய செய்தியில், இவ்வாண்டு, பெண் துறவியரைக் குறித்த கருத்துக்கள் முதலிடம் பெற்றுள்ளதை சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆழ்நிலை தியானத்தின் வழியே, செபத்தால் திருஅவையைத் தாங்கிவரும் துறவியர் இல்லையெனில், இவ்வுலகில் பயணம் செய்யும் திருஅவை, வலுவிழந்து போகும் என்று திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.

உலகில் துயருறும் பல்லாயிரம் வலுவிழந்தோர், ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடும் துறவியரின் செபங்களால் தாங்கப்பட்டு வருகின்றனர் என்பதை தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கை இழந்தோரின் வாழ்வில், நம்பிக்கை தீபங்களை ஏற்றிவைக்கும் துறவியருக்கு தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மிக ஆழமான ஆன்மீகத்தைக் கொண்டிருக்கவேண்டிய ஆழ்நிலை தியான வாழ்வு முறையில், இளையோரை உருவாக்கும் முயற்சிகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும், இத்தகைய வாழ்வைத் தெரிவு செய்வோரின் எண்ணிக்கையைக் குறித்து கவலை கொள்ளாமல், இவ்வாழ்வைத் தெரிவு செய்வோரின் தரத்தை உயர்த்தும் முயற்சிகள் நமக்குத் தேவை என்று திருத்தந்தை இச்செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2018, 15:07